செய்திகள்
கோப்புப்படம்

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வழங்க கட்டுப்பாடுகள்

Published On 2021-03-08 01:16 GMT   |   Update On 2021-03-08 01:16 GMT
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
வேலூர்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் நடைபெறுகிறது. தேர்தல் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடைபெறவும், 100 சதவீதம் வாக்களிப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றை அரசியல் கட்சியினர் வழங்குவதை தடுக்கவும், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்வதை கண்காணிக்கவும் 18 பறக்கும்படை, 18 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சட்டமன்ற தொகுதியின் முக்கிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேபோன்று அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு மதுபானங்கள் வழங்குவதை தடுக்க வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிறமாநிலங்களில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவது மற்றும் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மது, பீர்வகைகள் விற்பனை செய்வதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் வாக்குப்பதிவு முடிவடையும் வரை டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் வழங்க கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூர் கோட்ட டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், வேலூர் கோட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது, 21 வயதுக்கு உட்பட்ட நபர்களுக்கு மதுபானங்கள் வழங்க கூடாது என்று கடையின் மேற்பார்வையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் வாக்குப்பதிவு முடியும்வரை ஒருவருக்கு 2 புல் அல்லது 4 ஆப் அல்லது 8 குவாட்டர் அல்லது 3 பீர் மட்டுமே வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையும்மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் அந்த கடையின் மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கடையின் விற்பனை வழக்கத்தை விட 30 சதவீதம் அதிகமானால் அந்த கடை தணிக்கைக்கு உட்படுத்தப்படும். தேர்தலின்போது வாக்காளர்களுக்கு மதுபானங்கள் வழங்குவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
Tags:    

Similar News