செய்திகள்
நடுரோட்டில் நின்ற ஒற்றை காட்டு யானை

பண்ணாரி அம்மன் கோவில் அருகே நடுரோட்டில் நின்ற ஒற்றை காட்டு யானை

Published On 2021-03-04 09:10 GMT   |   Update On 2021-03-04 09:10 GMT
பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுரோட்டில் நின்ற ஒற்றை காட்டு யானையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் பண்ணாரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்திருக்கிறது. வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் தினமும் யானைகள் தண்ணீருக்காக இந்த ரோட்டை கடந்து சென்று வருகிறது. நேற்று ஒற்றை காட்டு யானை ஒன்று நடுரோட்டில் அங்கும் இங்குமாய் சுற்றி கொண்டிருந்தது.

இதையடுத்து அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் யானையை கண்டதும் தூரமாகவே வாகனங்களை நிறுத்திக் கொண்டனர். இதனால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து யானை அங்கிருந்து நகர்ந்து வன பகுதிக்குள் சென்றது.

இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, கோவிலுக்கு வரும் பக்தர்கள் யானையை கண்டால் தூரமாக நின்று கொள்ள வேண்டும். யானையின் அருகே செல்ல வேண்டாம். யானைகள் தண்ணீருக்காக ரோட்டை கடக்கும்போது அருகே சென்றால் மிதித்து விடும் என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News