செய்திகள்
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் முதியவர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட போது எடுத்த படம்.

ஈரோடு மாவட்டத்தில் 2-ம் கட்டமாக முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

Published On 2021-03-02 02:46 GMT   |   Update On 2021-03-02 02:46 GMT
ஈரோடு மாவட்டத்தில் 2-ம் கட்டமாக முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது.
ஈரோடு:

கொரோனா வைரசை கட்டுப்படுத்த இந்தியாவில் முதல் கட்டமாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதல் கட்டமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 5 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.

அதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக சுகாதார பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், போலீசார், பிற துறையில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் தடுப்பூசி போடும் முதியவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் எனவும், அப்படி இல்லை என்றால் நேரடியாக மருத்துவமனைக்கு வந்து ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டை உட்பட ஆவணங்களை காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் எனவும் சுகாதார துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறையினர் செய்துவந்தனர். இதேபோல் 45 வயதுக்கு மேற்பட்ட 59 வயதுக்கு உட்பட்ட இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 24 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 42 தனியார் ஆஸ்பத்திரிகளில் நேற்று முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயது முதல் 59 வயது வரை உள்ள இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு சரியாக உள்ளதா என்பதை பார்த்த பின்னரே தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்கள் ½ மணி நேரம் கண்காணிப்பில் இருந்தனர்.

24 அரசு ஆஸ்பத்திரிகளில் இலவசமாகவும், 42 தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணம் வசூ லிக்கப்பட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
Tags:    

Similar News