செய்திகள்
கோப்புபடம்

கிணற்றில் மூழ்கிய மகனை காப்பாற்ற சென்ற தாயும் பலி - தண்ணீர் குடிக்க சென்ற போது பரிதாபம்

Published On 2021-02-25 14:44 IST   |   Update On 2021-02-25 14:44:00 IST
தேன்கனிக்கோட்டை அருகே கிணற்றில் மூழ்கி தாயும் மகனும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே சென்னமாலம் கிராமத்தை சேர்ந்தவர் மாதேகவுடு. இவரது மனைவி ரத்தினம்மா (வயது 47). இவர்களது மகன் மாதேஷ் (26). மனநிலை பாதித்தவர்.

இந்த நிலையில் ரத்தினம்மா நேற்று மாலை தனது மகன் மாதேசுடன், ஆடு- மாடுகளை மேய்க்க மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். அப்போது மாதேஷ், தண்ணீர் தாகம் எடுப்பதாக கூறி அங்குள்ள தனியார் விவசாய கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார்.

அப்போது மாதேசு திடீரென நிலைதடுமாறி கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் கூச்சல் போட்டார்.

இதை பார்த்து பதறிய ரத்தினம்மா, மகனை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார். அவருக்கும் நீச்சல் தெரியாததால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இருவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று காப்பாற்ற முயன்றனர். ஆனால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்த தகவலின் பேரில் தள் போலீசார் விரைந்து வந்து தாய்- மகன் உடல்களை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆடு-மாடுகளை மேய்க்க சென்ற போது கிணற்றில் மூழ்கி தாய்- மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Similar News