செய்திகள்
வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி
வேதாரண்யத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் உயிரிழந்தார். அவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழ் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் சுற்றித்திரிகிறார்கள். நேற்று மாலை வேதாரண்யம் திருத்துறைப்பூண்டி ரோட்டில் மானங்கொண்டான் ஆற்றுப்பாலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அந்த பெண் மீது மோதியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
அப்போது அந்த வழியாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தனது காரில் வந்தார். அவர் விபத்தில் காயமடைந்த பெண்ணை தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் இறந்தார்.
இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் இறந்த பெண் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் மீது மோதிய மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.