செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

நாராயணசாமி அரசுக்கு மெஜாரிட்டி உள்ளதா?: ஆலோசித்து முடிவு எடுப்பேன்- தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2021-02-18 07:54 GMT   |   Update On 2021-02-18 07:54 GMT
புதுவை அரசு மெஜாரிட்டி நிருபிக்க உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் அளித்த மனுவை அலசி ஆராய்ந்து சட்ட விதிக்கு உட்பட்டு செயல்படுவேன் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னராக இருந்த கிரண்பேடி நேற்று முன்தினம் திடீரென நீக்கப்பட்டார்.

புதுவை கவர்னர் பொறுப்பு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று மாலை தமிழிசை புதுவைக்கு வந்தார். அவருக்கு போலீஸ் அணிவகுப்பு அளிக்கப்பட்டு கவர்னர் மாளிகை அதிகாரிகள் வரவேற்றனர்.

இன்று காலை தமிழிசை புதுவை கவர்னராக பதவியேற்றுக்கொண்டார். கவர்னர் மாளிகை வளாகத்தில் பதவியேற்பு விழா நடந்தது. முதல் நிகழ்வாக தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், ஜனாதிபதியின் கவர்னர் நியமன அறிவிப்பை வாசித்தார்.

இதனைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

தமிழிசை தமிழில் உறுதி மொழி வாசித்து கவர்னராக பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.

கவர்னர் மாளிகை முன்பு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் தமிழிசை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி, எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி
நாராயணன், அன்பழகன், சிவா, வையாபுரி மணிகண்டன், அனந்த ராமன், ஜெயமூர்த்தி, டி.பி.ஆர்.செல்வம், ஜெயபால், வெங்கடேசன், திருமுருகன், பாஸ்கர், சுகுமாறன், சந்திரபிரியங்கா, கோபிகா, சாமிநாதன், செல்வகணபதி, தங்க.விக்ரமன், பா.ஜனதா மேலிட பார்வையாளர் நிர்மல்குமார் சுரானா, கவர்னரின் தனி செயலர் சுந்தரேசன், அரசு செயலர்கள் அசோக்குமார், சுந்தர வடிவேலு, கலெக்டர் பூர்வா கார்க், டி.ஜி.பி. ரன்வீர் சிங்கிருஷ்ணியா, கூடுதல் டி.ஜி.பி. ஆனந்தமோகன் மற்றும் அரசு துறை செயலர்கள், அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுவையில் 26-வது கவர்னராக பதவியேற்ற தமிழிசை 5-வது பெண் கவர்னர் ஆவார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மொழி தெரிந்த மாநிலத்திற்கு வந்திருப்பது மகிழ்ச்சி. புதுவைக்கு கவர்னராக மட்டுமல்ல, மக்களுக்கு துணைபுரியும் சகோதாரியாக வந்துள்ளேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆண்டவன் அருளோடும், ஆள்பவர், தெய்வங்கள், தெலுங்கானா, தமிழகம், புதுவை மக்கள் ஆகியோரின் ஆசியோடு இங்கு வந்துள்ளேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றுள்ளேன்.

தமிழில் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. தமிழில் உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று கேட்டபோது புதுவை சரித்திரத்தில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுவை மக்களின் சேவகனாக, அவர்களோடு அன்போடு பழகுவதற்காக வந்துள்ளேன் என தெரிவிக்கிறேன். புதுமையாக பல நிகழ்வுகளை நடத்தி காண்பிக்க வேண்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என எண்ணியுள்ளேன்.

தெலுங்கானாவில் கவர்னராக நியமிக்கப்பட்டபோது இளைய கவர்னர் மாநிலத்தை கையாள்வாரா? என கேள்வி எழுப்பினர். நான் ஒரு மகப்பேறு மருத்துவர். பிறந்த குழந்தையை கையாள தெரியும். இதன்படி சிறப்பாக ஒன்றை ஆண்டு கவர்னராக செயல்பட்டுள்ளேன்.

என் மீது நம்பிக்கை வைத்து புதுவை துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இரட்டை குழந்தையாக இருந்தாலும், அவர்களை சரியாக பாதுகாப்பேன். மகிழ்ச்சியாக நான் சேவை செய்வேன்.

புதுவைக்கு வந்தவுடன் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தேன். நம் நாட்டில் தயாரித்த தடுப்பூசியை புதுவையில் வழங்கி வருகிறோம். நம் நாட்டு விஞ்ஞானிகள், மத்திய, மாநில அரசுகளுக்கு தடுப்பூசி தயாரித்து வழங்கியதற்கு வாழ்த்துக்கள்.


புதுவையில் தடுப்பூசி போடுவது குறைவு என அறிந்தது மன வருத்தம் அளிக்கிறது. 25 நாடுகள் நம் நாட்டின் தடுப்பூசி வாங்க காத்திருக்கின்றனர். நாம் தடுப்பூசி போட தயக்கம் காட்டக்கூடாது.

முதல் நிகழ்ச்சியாக தடுப்பூசி செலுத்தும் இடம் சென்று ஊக்கப்படுத்த உள்ளேன். ஏன் தடுப்பூசி போட வேண்டும் என நினைக்க வேண்டாம். நம் நாட்டில் போலியோ இல்லை.

ஆனால், நாம் சொட்டு மருந்து வழங்குகிறோம். நாம் தடுப்பூசி போட்டால்தான் கொரோனா வைரசை தடுக்க முடியும். முக்கிய பதவி வகிப்போர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே முககவசம் அணிவது, கைகளை கழுவுவதை பின்பற்ற வேண்டும்.

கவர்னராக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு உதவித்தொகை வழங்கும் கோப்பில் முதல் கையெழுத்து போட்டுள்ளளேன். 2-வதாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டு உதவித்தொகை வழங்க கையெழுத்திட்டுள்ளேன். ஒடுக்கப்பட்ட மக்களின் தலையெழுத்தை நல்லதாக மாற்றும் திட்டத்துக்கு கையெழுத்திட்டுள்ளேன்.

புதுவையில் வேலைவாய்ப்பு இல்லை ஆனால், நிலம் உள்ளது. தொழிற்சாலைகள், சுற்றுலாவை ஊக்கப்படுத்தினால் வேலைவாய்ப்பு பெருகும். எனவே தொழிற்சாலை வரவழைக்க முழு முயற்சி எடுப்பேன்.

எனக்கு கவர்னர் அதிகாரம், துணை நிலை ஆளுநர் அதிகாரம், முதல்வர் அதிகாரம், எம்.எல்.ஏ.க்கள் அதிகாரம், அதிகாரிகள் அதிகாரம் என்ன? என தெரியும். அனைத்தும் தெரிந்தே வந்துள்ளேன்.

புதுவை நலனுக்காக மட்டும் என் பணி இருக்கும். முன்னாள் கவர்னரை சந்தித்து நன்றி கூறினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் எழுப்பிய கேள்விகளும், பதில்களும் வருமாறு:-

கேள்வி:- எதிர்கட்சிகள் அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடக்கோரி மனு அளித்துள்ளார்களோ?

பதில்:- மனு அளித்தது தெரியும். இனிமேல்தான் அந்த மனுவை பார்க்க உள்ளேன். பல தலைவர்கள் என்னை பார்க்க அனுமதி கேட்டுள்ளனர். நான் சமமானவள், பொதுவானவள்.

ஆளும் கட்சி, எதிர்கட்சி, பொதுமக்கள் பார்க்க நேரம் ஒதுக்குவேன். வித்தியாசம் பார்க்க மாட்டேன். எதிர்க்கட்சிகள் அளித்த மனுவை அலசி ஆராய்ந்து சட்ட விதிக்கு உட்பட்டு செயல்படுவேன்.

கே:- மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது. ஆனால் புதுவையில் ரேஷன்கடைகள் இல்லையே?

ப:- புதுவைக்கு வந்ததும் மக்களின் பொருளாதார நிலை என்ன? என கேட்டேன். வறுமைக்கோடுக்கு கீழ், வறுமைக்கோட்டிற்கு மேல் மக்கள் வாழ்கின்றனர். பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுவை சிறிய மாநிலம். மக்கள் தொகையும் குறைவு.

இங்குள்ளவர்கள் வசதியாக வாழ்கின்றனர் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் புதுவையில் பாமர மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் பசியோடு வாடாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். திட்டங்களை ஆய்வு செய்து முடிவு செய்வேன். நான் எடுக்கும் முடிவு மக்களுக்கான முடிவாக இருக்கும்.

கே:- கவர்னர் மாளிகை சுற்றிலும் அமைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றப்படுமா?

ப:- மக்களுக்கும், எனக்கும் சாதாரண இடைவெளி கூட இருக்கக்கூடாது என நினைப்பவள். கொரோனா உச்சத்தில் இருந்தபோதுகூட பாதுகாப்பு உடை அணிந்து மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை ஊக்கப்படுத்தி உள்ளேன். மக்களுக்கும் எனக்கும் இடையில் எந்த இடைவெளியும் இருக்காது, தடுப்பும் இருக்காது. மக்களோடு உள்ள நெருக்கம் தொடரும்.

கே:- புதுவையில் தமிழ் அதிகாரிகள் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளார்களே?

ப:- தமிழ் புறக்கணிக்கப்படவில்லை, ஆராதிக்கப்படுகிறது. தமிழ் மகுடம் சூடும். தமிழில்தான் பதவியேற்றுள்ளேன். தமிழுக்கு அதிகாரம் கிடைக்கும். தமிழிசை கவர்னராக இருக்கும்போது  தமிழ் கோலோச்சும். தற்போதுதான் வந்துள்ளேன். அதிகாரிகள் தொடர்பாக ஆய்வு செய்து முடிவெடுப்பேன்.

கே:- கவர்னர், முதல்-அமைச்சர் மோதலால் அதிகாரிகள் யார் பேச்சை கேட்பது என தெரியாமல் குழம்பியுள்ளனர். இனி அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுவார்களா?

ப:- அவரவர்களுக்கு ஒரு பாணி இருக்கும். எனது பாணி தனியானது. மற்றவர்களின் பாணியை விமர்சனம் செய்யமாட்டேன். இனிமேல் இணக்கமான சூழ்நிலை இருக்கும். அனைவரின் அதிகாரமும் எனக்கு தெரியும்.  அவரவர் அதிகாரத்துக்கு உட்பட்ட வகையில் உரிமைகள் பாதுகாக்கப்படும். யாரும் ஒடுக்கப்பட மாட்டார்கள், தடுக்கப்படமாட்டார்கள்.

கே:- பதவியேற்பு விழாவில் பத்திரிகையாளர்களுக்கு இடம் தரவில்லையே?

ப:- என் மனதிலும் இடம் உண்டு, கவர்னர் மாளிகையிலும் இடம் உண்டு. புதுவையில் நீங்கள் எங்கு சென்றாலும் இடம் உண்டு. ஒரு நல்ல அரசியல்வாதி, நல்ல பத்திரிகையாளர்தான் மக்களுக்கு நல்ல சேவை செய்ய முடியும். அசவுகரியம் நடந்திருந்தால் என் வருத்தத்தை தெரிவிக்கிறேன்.

கே:- கவர்னர், முதல்-அமைச்சர் மோதல் நீடிக்குமா?

ப:- என் பாணி தனியானது என கூறிவிட் டேன். சட்டவிதிக்கு உட்பட்டு செயல்படுவேன். பிரச்சனை ரீதியாகத்தான் எதனையும் அணுகுவேன். எனக்கு எந்த ஈகோவும் கிடையாது. என் பாணி சுமூகமானதாக இருக்கும். மக்கள் பயன்படும் வகையில் செயல்படுவேன்.

கே:- துணை ராணு படை பாதுகாப்பு போடப்பட்டு கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. ஆனால், போலீசாருக்கு 13-வது சம்பளம்கூட கிடைக்கவில்லை?

ப:- நான் இப்போதுதான் வந்துள்ளேன். அதைப்பற்றி பார்க்கிறேன்.

கே:- சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ் தெரிந்த உங்களை நியமித்துள்ளார்களா?

ப:- தமிழ் பேசும் இடத்துக்கு வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. என்னை நியமித்ததில் எந்த உள்அர்த்தமும் இல்லை, அரசியலும் இல்லை. உள்ளார்த்தமாக வந்துள்ளேன், உள் அர்த்தத்தோடு வரவில்லை.

கே:- அரசுக்கும், கவர்னர் மாளிகைக்கும் இடையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதே?

ப:- நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை பற்றி நாம் முடிவெடுக்க முடியாது. வழக்கை எப்படி கொண்டுசெல்ல வேண்டும் என ஆலோசித்து முடிவெடுப்போம்.

கே:- கிரண்பேடி போல நீங்களும் மக்களை தொடர்ந்து சந்திப்பீர்களா?

ப:- நான் கவர்னராக இல்லாமல், கட்சி தலைவராக இருந்தபோது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மக்களை சந்தித்தேன். தெலுங்கானா கவர்னர் மாளிகை பிரஜா மாளிகையாக மாறியுள்ளது. மக்களை சந்தித்து பழக்கம் உள்ளவள் நான். அதனால் அவசர நிலையில் இருப்பவர்கள்கூட என்னை நேரடியாக அணுகலாம். எனது மக்கள் சந்திப்பு எப்போதும்போல தொடரும்.
 
கே:- ஆட்சியாளர்கள் கவர்னர் நிதியை தடுத்துவிட்டார் என குற்றம் சாட்டியுள்ளார்களே?

ப:- முன்னாள் இருந்தவர்களின் நடவடிக்கையை விமர்சிக்கமாட்டேன். என் பாணி மாறுபட்ட பாணியாக இருக்கும். நான் தடுத்து பழக்கப்பட்டவள் அல்ல, அன்பை கொடுத்தே பழக்கப்பட்டவள் நான். சாமானிய மக்களுக்கான என்னுடைய பணி தொடரும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News