செய்திகள்
மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் வனத்துறை அதிகாரி பேச்சு வார்த்தை நடத்திய காட்சி.

கூடலூர் அருகே காட்டு யானையை பிடிக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2021-02-15 16:56 GMT   |   Update On 2021-02-15 16:56 GMT
கூடலூர் அருகே காட்டு யானையை பிடிக்கக்கோரி கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்:

கூடலூர் கோத்தர்வயல், தோட்டமூலா, அள்ளூர் வயல், 27-வது மைல், மேல் கூடலூர் உள்பட பல இடங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காயத்துடன் சுற்றி வரும் காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. அதற்கு உரிய சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் காட்டு யானையை பிடிக்க கோரி அள்ளுர்வயல், கோடமூலா பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்று காலை 7 மணிக்கு கூடலூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வனத்துறையை கண்டித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் காயம் அடைந்து சுற்றி வரும் காட்டு யானையை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று கூறினார்கள்.

இதையடுத்து கிராம மக்களுடன் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது காட்டு யானையை பிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

2 ஆண்டுகளுக்கு மேலாக காட்டு யானை கிராமங்களுக்குள் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் அதன் உடலில் உள்ள காயங்களில் இருந்து சீழ் வடிகிறது. ஆனால் அதற்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஊருக்குள் முகாமிட்டு உள்ள அந்த காட்டுயானை பொதுமக்களை துரத்துகிறது. இதனால் உயிர்பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வனத்துறையினர் அந்த காட்டு யானையை பிடிக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்துவோம். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News