செய்திகள்
ஜனாதிபதியிடம் மனு அளித்த நாராயணசாமி

புதுவை ஆளுநர் கிரண் பேடியை திரும்ப பெறுங்கள்... ஜனாதிபதியிடம் முதல்வர் நாராயணசாமி மனு

Published On 2021-02-10 10:00 GMT   |   Update On 2021-02-10 10:00 GMT
புதுச்சேரி வளர்ச்சிக்கு தடையாக உள்ள துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் இன்று ஜனாதிபதியிடம் மனு அளித்தனர்.
புதுடெல்லி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையில் கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது. யூனியன் பிரதேசமான புதுவையில் தனக்குத்தான் அதிகாரம் என கவர்னர் கிரண்பேடி அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட்டு வருகிறார் என்றும், மாநில வளர்ச்சி, மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் என்றும் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

கவர்னர் கிரண்பேடியை கண்டித்து ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தர்ணா போராட்டம், ஊர்வலம் என பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஜனாதிபதியை சந்தித்து கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடுகள் குறித்து புகார் செய்ய நாராயணசாமி டெல்லி சென்றார்.

ஆனால், குடியரசு தின விழா பணிகளில் ஜனாதிபதி ஈடுபட்டிருந்ததால் சந்திக்க முடியவில்லை. பின்னர் நேரம் ஒதுக்கித்தருவதாக கூறினார். இதனால் நாராயணசாமி புதுவை திரும்பினர். 

இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர். புதுச்சேரி வளர்ச்சிக்கு தடையாக உள்ள துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்ப பெற வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனு அளித்தனர். கிரண் பேடியை திரும்ப பெறுவது தொடர்பாக புதுவை மக்களிடம் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பெறப்பட்ட கையெழுத்து இயக்க பிரதிகளையும் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தனர்

பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசுக்கு கிரண்பேடி தரும் பிரச்சினைகள் குறித்து குடியரசு தலைவரிடம் தெரிவித்தேன். கூட்டணி சார்பில் பெறப்பட்ட கையெழுத்து இயக்க பிரதிகளை குடியரசு தலைவரிடம் வழங்கினேன்.

புதுச்சேரி அரசின் திட்டங்களுக்கு எதிராக ஆளுநர் கிரண் பேடி செயல்படுகிறார். நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். அதிகாரிகளுக்கு தன்னிச்சையாக உத்தரவிடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News