அரிவாள்-துப்பாக்கியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறித்த பிரபல ரவுடி கைது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக் (வயது 23). சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த புதுக்கோட்டை நத்தம் பண்ணையை சேர்ந்த சன்னாசி பாண்டியன் (31) என்பவர் கார்த்திக்கிடம் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுக்கவே ஆத்திரமடைந்த சன்னாசிபாண்டியன், தான் வைத்திருந்த அரிவாள் மற்றும் துப்பாக்கியால் மிரட்டி கார்த்திக் வைத்திருந்த ரூ.4ஆயிரம் பணத்தை பறித்து சென்று விட்டார்.
இது குறித்து கார்த்திக் திருக்கோகர்ணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சன்னாசிபாண்டியனை கைது செய்ததுடன் அவர் வைத்திருந்த அரிவாள் மற்றும் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். சன்னாசிபாண்டியன் மீது புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் நிலையங்களில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.