செய்திகள்
கோப்புபடம்

காவேரிப்பட்டணம் அருகே அரசு பஸ் மீது வேன் மோதி 6 பேர் பலி

Published On 2021-02-02 15:47 IST   |   Update On 2021-02-02 15:47:00 IST
பெங்களூருவுக்கு சுற்றுலா சென்றபோது காவேரிப்பட்டணம் அருகே நின்று கொண்டிருந்த பஸ் மீது ஆம்னி வேன் மோதியதில் 6 பேர் பலியானார்கள்.
காவேரிப்பட்டணம்:

ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 24). இவரும், பவானி காமாட்சியம்மன் கோவில் பின்புறம் உள்ள திருநீலகண்டன் வீதியை சேர்ந்த திருத்தனிவாசன் மகன் லிங்கா என்கிற விக்னேஷ் (24), பவானி சீனிவாசபுரம் கல் தொழிலாளர் வீதியை சேர்ந்த கண்ணன் மகன் பிரசாந்த் (21), ராஜா மகன் சுரேந்தர் (22), பவானி சீனிவாசபுரம் ஜோதி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த மணிகண்டன் மகன் கவுதம் (20), பவானியை சேர்ந்த பரணி (23), அசோக் (18) ஆகிய 7 பேரும் ஒரு ஆம்னி வேனில் நேற்று நள்ளிரவு பவானியில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சுற்றுலா சென்றனர்.

அவர்கள் சென்ற வேனை சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி கிராமத்தைச் சேர்ந்த பூபதி (25) என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த வேன் நேற்று அதிகாலை 4 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே திம்மாபுரம் கூட்டுரோடு பக்கமாக சென்று கொண்டிருந்தது.

அந்த நேரம், சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் சாலையோரமாக நிறுத்தி பயணிகளை இயற்கை உபாதைக்கு சென்று வர அனுமதித்தார். 

இதனால் பஸ்சில் பயணம் செய்த ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த தேவராஜ் (29) என்பவர் பஸ்சின் பின்புறமாக தர்மபுரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை கடந்து எதிர் 
திசைக்கு செல்ல முயன்றார்.

அப்போது ஆம்னி வேன் நிலைதடுமாறி, தேவராஜ் மீது மோதி விட்டு சாலையோரம் நின்ற பஸ்சின் பின்புறமாக பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் வேன் அப்பளம் போல நொறுங்கியது. 

மேலும் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் பூபதி மற்றும் சுற்றுலா பயணிகள் சிவக்குமார், லிங்கா என்கிற விக்னேஷ், சுரேந்தர், பிரசாந்த் மற்றும் சாலையை கடந்த பயணி தேவராஜ் ஆகிய 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் வேனில் வந்த கவுதம், பரணி, அசோக் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பலியான 6 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்து காரணமாக அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காவேரிப்பட்டணத்தில் அரசு பஸ் மீது ஆம்னி வேன் மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News