செய்திகள்
ஆலங்குடியில் கார் மோதியதில் முதியவா் பலி
ஆலங்குடியில், கார் மோதியதில் முதியவர் பலியானார். மற்றொரு விபத்தில் பஸ் மோதியதில் தொழிலாளியின் கால் நசுங்கியது.
ஆலங்குடி:
ஆலங்குடி, மணவிடுதி அருகே உள்ள பெருங்கொண்டான்விடுதியை சேர்ந்தவர் மலையப்பன் (வயது 65). இவர் நேற்று காலை மொபட்டில் கூளையான் விடுதி ரைஸ் மில் பஸ் நிறுத்தத்திலிருந்து கம்மங்காடு செல்ல புதுக்கோட்டை-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அந்த வழியாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாண்டி மகன் ராஜபாண்டி ஓட்டி வந்த கார், மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில், மொபட்டிலிருந்து தூக்கி வீசப்பட்ட மலையப்பனுக்கு தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த சம்பட்டி விடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மலையப்பனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே மலையப்பன் இறந்தார். இந்த விபத்து குறித்து சம்பட்டிவிடுதி போலீசார் ராஜபாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அன்னவாசல் கோல்டன் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (57). தொழிலாளியான இவர், நேற்று மோட்டார் சைக்கிளில் பரம்பூர் சென்று விட்டு அங்கிருந்து அன்னவாசல் நோக்கி வந்து கொண்டிருந்தார். புளியம்பட்டி அருகே வந்தபோது அந்த வழியாக வந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மாரிமுத்துவின் ஒரு கால் நசுங்கியது.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து அன்னவாசல் போலீசார், பஸ் டிரைவர் பரம்பூரை சேர்ந்த கணேசன் (35) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.