செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 வீடுகளில் 45 பவுன் நகை, ரூ.2.70 லட்சம் திருட்டு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 4 வீடுகளில் 45 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57). மின்சார வாரிய மேற்பார்வையாளர். இவர் சாமல்பட்டியில் நடந்த உறவினர் இறுதி சடங்கில் பங்கேற்க வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் சென்று இருந்தார். நேற்று முன்தினம் அக்கம் பக்கத்தினர் போன் மூலம், வீடு திறந்து கிடக்கிறது என ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் விரைந்து வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டும், உள்ளே இருந்த பீரோ திறந்தும் கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து ராஜேந்திரன், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
மத்திகிரியை அடுத்த அச்செட்டிப்பள்ளி கேட் பகுதியை சேர்ந்தவர் பசுவராஜ் (54). விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் விவசாய நிலத்திற்கு சென்றார். மாலை அவர் வீட்டிற்கு வந்த போது வீடு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறக்கப்பட்டு 3 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரம் திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து பசுவராஜ், மத்திகிரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்திகிரி அருகே உள்ள இடையநல்லூரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (40). கூலித்தொழிலாளி. இவர் வீட்டை பூட்டி பொருட்கள் வாங்க கடைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு திறக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போனது தெரிந்தது. இதுகுறித்து மத்திகிரி போலீசில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கெலமங்கலம் அடுத்த பைரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜம்மா (54). விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு, விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் மாலை வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவும் திறந்து கிடந்தது. பீரோவில் பார்த்தபோது அதில் இருந்த 7 பவுன் நகைகள் திருட்டு போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சரோஜம்மா கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 4 இடங்களில் வீடுகளின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகள் மற்றும் ரூ.2.70 லட்சம் ஆகியவற்றை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.