செய்திகள்
விழாவில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்.

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்- தங்கம் தென்னரசு பேச்சு

Published On 2021-01-28 12:12 IST   |   Update On 2021-01-28 12:12:00 IST
மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கூறினார்.
காரியாபட்டி:

காரியாபட்டி அருகே ஜோகில்பட்டி, பந்தனேந்தல், கீழ உப்பிலிகுண்டு, மந்திரி ஓடை ஆகிய கிராமங்களில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட விழாவை முன்னிட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசினை தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவது வழக்கமான ஒன்றாகும். இதேபோன்று தி.மு.க. சார்பில் திருச்சுழி தொகுதி முழுவதும் விளையாட்டு போட்டி, பெண்களுக்கான கோலப்போட்டி வைத்து அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டு வருகிறது. திருச்சுழி தொகுதியில் காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் சென்ற மாதம் பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு நிவாரணமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

நானும் விருதுநகர் மாவட்ட கலெக்டரை சந்தித்து நிவாரண வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.

காரியாபட்டி பகுதியில் முதியோர் உதவித் தொகை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளேன்.

திருச்சுழி தொகுதியில் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தான் பல்வேறு நலத்திட்டங்கள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், நகர செயலாளர் செந்தில், கீழஉப்பிலிக்குண்டு ஊராட்சி செயலாளர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News