செய்திகள்
அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 2 புதிய தொடக்க பள்ளிகள் திறப்பு விழா - அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பங்கேற்பு

Published On 2021-01-26 18:14 GMT   |   Update On 2021-01-26 18:14 GMT
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தங்கல், நாரணாபுரம் ஆகிய இடங்களில் புதிய தொடக்கப்பள்ளிகள் தொடக்க விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
சிவகாசி:

சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனி, நாரணாபுரம் என்.லட்சுமியாபுரம் ஆகிய இடங் களில் புதிய தொடக்க பள்ளிகள் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி புதிய பள்ளிகளை தற்காலிக கட்டிடங்களில் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோடிக்கணக்கான நிதி உதவிகளை கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கி வருகிறார். மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், வண்ண சீருடைகள், காலணிகள், மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவை வழங்கி ஊக்குவித்து வருகிறார்.

தற்போது தற்காலிக கட்டிடங்களில் திறக்கப்பட்டுள்ள இந்த 2 பள்ளிகளுக்கும் அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.

விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும். புதிய பள்ளிகள் தொடங்கப்படுவதன் நோக்கம். மாணவர்கள் பள்ளிக்காக தொலைத்தூரங்களுக்கு செல்ல வேண்டாம் என்பது தான். வீட்டின் அருகில் பள்ளி இருப்பது பாதுகாப்பானது. புதிய பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த பின்னர் பள்ளிகள் செயல்படும். தற்போது தொடங்கப்பட்டுள்ள பள்ளிகள் வரும் காலங்களில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும். புதிய பள்ளிகள் தொடங்க அனுமதி அளித்த முதல்-அமைச்சருக்கும், கல்வி அமைச்சருக்கும் தொகுதி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுபாஷினி, வேளாண் உற்பத்தி குழு தலைவர் தெய்வம், நாரணாபுரம் பஞ்சாயத்து தலைவர் வேதராஜன், வார்டு உறுப்பினர் மகேஸ்வரி, அ.தி.மு.க. நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பொன்சக்திவேல், கருப்பசாமி, முத்தையா, ஆ.செல்வம், பொன்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News