செய்திகள்
எமரால்டு பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தேயிலை செடிகள் கருகி உள்ள காட்சி.

மஞ்சூர் பகுதியில் பனிப்பொழிவால் தேயிலை செடிகள் கருகின- விவசாயிகள் கவலை

Published On 2021-01-26 11:39 GMT   |   Update On 2021-01-26 11:39 GMT
மஞ்சூர் பகுதியில் பனிப்பொழிவால் தேயிலை செடிகள் கருகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
மஞ்சூர்:

நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் பருவமழை நன்கு பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் தேயிலை தோட்டங்களில் உரமிடும் பணி பாதிக்கப்பட்டது.

அதன்பின்னர் மழை குறைந்த பிறகு விவசாயிகள் உரமிட தொடங்கினர். காலம் கடந்து உரமிட்டதால், வழக்கத்துக்கு மாறாக தேயிலை தோட்டங்களில் பனிக்காலத்திலும் மகசூல் அதிகரித்து உள்ளது.

இதற்கிடையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் பனிப்பொழிவு நிலவுகிறது. குறிப்பாக மஞ்சூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. மேலும் கடுங்குளிர் நிலவுகிறது. பனிப்பொழிவு காரணமாக மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான எமரால்டு, காந்திகண்டி, இத்தலார், தங்காடு, மணியட்டி, பாலகொலா, நஞ்சநாடு, கல்லக்கொரை, பிக்கட்டியில் தேயிலை செடிகள் கருகி விட்டன. பச்சை பசேல் என காட்சியளித்த தேயிலை செடிகள் பனிப்பொழிவால் பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கின்றன. இதனால் பச்சை தேயிலை கிடைக்காத நிலை உள்ளது. 

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தொடர் மழையால் மகசூல் அதிகரித்து இருந்தபோதிலும், பனிப்பொழிவால் பச்சை தேயிலை கிடைக்காத நிலை உள்ளது. இது கவலை அளிக்கிறது

செடிகளில் இருந்து கருகிய இலைகளை அகற்றி வருகிறோம். கடந்த 5 மாதங்களாக மழை மற்றும் பனிப்பொழிவால் பச்சை தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனவே அரசு நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News