செய்திகள்
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலுக்கு திருமண நிகழ்ச்சிக்காக வந்திருந்த பொதுமக்கள்கூட்டத்தை படத்தில் காணலாம்

திருவந்திபுரம் தேவநாதசுவாமிகோவிலில் ஒரே நாளில் 85 திருமணம் - போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

Published On 2021-01-26 04:27 GMT   |   Update On 2021-01-26 04:27 GMT
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஒரே நாளில் 85 திருமணங்கள் நடைபெற்றது. இதன் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
நெல்லிக்குப்பம்:

கடலூர் அருகே புகழ்பெற்ற திருவந்திபுரம் தேவநாதசுவாமிகோவிலில் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் கோவில் எதிரில் உள்ள மலையில் 50 முதல் 200-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். அதேபோல் திருவந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் சுமார் 50 திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு உத்தரவின்பேரில் தேவநாதசுவாமிகோவில் முன்பு உள்ள மலையில் கடந்த 10 மாதங்களாக திருமணம் நடைபெறாமல் இருந்து வந்தது. இதற்கிடையில் தமிழக அரசு தற்போது தளர்வுகள் அறிவித்துள்ளதால் மலையில் திருமணம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் திருமணம் செய்பவர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு பெற்று, அதன்பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கு முன்பு கோவில் அலுவலகத்தில் நேரடியாக அனுமதி பெற்று திருமணம் நடத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் முன்பு உள்ள மண்டபத்தில் அதிகாலை முதல் திருமணம் நடைபெற்று வந்தது. இதில் மலையில் சுமார் 50 திருமணமும், கோவிலை சுற்றி உள்ள தனியார் மண்டபங்களில் 35 திருமணமும் என மொத்தம் 85 திருமணங்கள் நடைபெற்றது.

இதன் காரணமாக கடலூர் - பாலூர் சாலையில் வழக்கத்தை விட அதிக அளவில் வாகனங்கள் சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இந்த போக்குவரத்து நெரிசலால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். நேற்று தை மாதத்தில் வரக்கூடிய முதல் முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது.

Tags:    

Similar News