23 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யக்கோரி மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூரில் விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
23 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யக்கோரி விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பதிவு: ஜனவரி 25, 2021 18:58
மங்கைநல்லூரில் விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
குத்தாலம்:
மயிலாடுதுறை அருகே மங்கைநல்லூர் கடைவீதியில் வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் 23 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லை அரசு கொள்முதல் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு வீரசோழன் விவசாயிகள் முன்னேற்ற சங்க தலைவர் வாணிதாஸ் தலைமை தாங்கினார். இயற்கை விவசாய ஆர்வலர்கள் ராஜசேகரன், காத்தலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிலம், நீர், பாதுகாப்பு இயக்க மாநில தலைவர் இரணியன் மற்றும் விஷ்ணுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், 23 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை எந்தவித பிடித்தம் இல்லாமல் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.150 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு வங்கிகளில் வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
தொடர் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். நெல்லின் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் எ ன்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில், செயற்குழு உறுப்பினர் சிவசங்கர் நன்றி கூறினார்.