செய்திகள்
கோப்புபடம்

ஜெயங்கொண்டம் அருகே மாமனார் வீட்டின் முன்பு மகன்களுடன் ஆசிரியர் தர்ணா

Published On 2021-01-25 09:14 GMT   |   Update On 2021-01-25 09:14 GMT
ஜெயங்கொண்டம் அருகே மாமனார் வீட்டின் முன்பு மகன்களுடன் ஆசிரியர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம்(வயது 54). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமலிங்கத்தின் மகள் சாந்தி(48) என்பவருக்கும் கடந்த 1999-ம் ஆண்டு திருமணம் நடந்து அறிவுமதி(15), பாலாஜி(10) என 2 மகன்கள் உள்ளனர். இதில் அறிவுமதி மன வளர்ச்சி குன்றியவர் ஆவார். விநாயகம், சிதம்பரத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சாந்தி மருந்தாளுனராக பணிபுரிந்தார்.

மேலும் அவர்கள், அறிவுமதி மனவளர்ச்சி குன்றியவராக இருப்பதால் வாடகை வீட்டில் இருக்க முடியாது என நினைத்து, கடன் வாங்கி வீடு கட்டியுள்ளனர். புது வீட்டில் குடிபுகுந்து 2 ஆண்டுகளில் சாந்தி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் விநாயகம், 2 மகன்களையும் கவனித்து, அவர்களை படிக்க வைத்து வருகிறார். தனக்கு கிடைக்கிற வருமானம் பிள்ளைகளை கவனிக்கவும், படிக்க வைக்கவும், வீடு கட்ட வாங்கிய கடனை கட்டவும் போதாத சூழல் உள்ளதால், ஊர் முக்கியஸ்தர் முன்னிலையில் அவர் தனது மாமனாரிடம் உதவி கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் உதவி செய்யாத நிலையில், நேற்று விநாயகம் தனது 2 மகன்களுடன் ராமலிங்கத்தின் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து ராமலிங்கத்திடம் கேட்டபோது, அவர் கூறுகையில், எனது மகளுக்கு 30 பவுன் நகை, சீர்வரிசை, ரொக்கம் உள்பட அனைத்தும் கொடுத்துள்ளேன். வீடு குடி போனதற்கும், வேலை வாங்கிக் கொடுப்பதற்கும் ஒரு குறிப்பிட்ட தொகை என பலமுறை கொடுத்துள்ளேன். எனது மகள் உயிரோடு இருந்தபோது நிறைய செய்துள்ளேன். இப்போது அவர் இறந்துவிட்டார். அவரே இல்லாதபட்சத்தில் நான் ஏன் செய்ய வேண்டும். உழைத்து சாப்பிட வேண்டியதுதானே?. மனைவியை இழந்த நான், தனிமையில் எனது வருமானத்தில் சமைத்து சாப்பிட்டு வருகிறேன், என்றார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாமனாரிடம் உதவி கேட்டு மருமகன் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News