செய்திகள்
கொள்ளையடித்த நகைகளை மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற காட்சி

நிதி நிறுவனத்தில் 25 கிலோ நகை கொள்ளை- 7 கொள்ளையர்களையும் ஓசூருக்கு அழைத்து வருகிறார்கள்

Published On 2021-01-24 08:32 GMT   |   Update On 2021-01-24 08:32 GMT
தனியார் நிதி நிறுவனத்தில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 25 கிலோ நகையை கொள்ளையடித்த வழக்கில் கைதான 7 பேர் நாளை ஓசூருக்கு அழைத்துவரப்படுகிறார்கள்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு மர்ம கும்பல் 25 கிலோ தங்கநகைகளை கொள்ளையடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது.

கொள்ளையர்கள் கொண்டு சென்ற நகை பையில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு இருந்தது. இதன் மூலம் கொள்ளை கும்பலை சேர்ந்த 7 பேரை தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ரிங் ரோடு பகுதியில் கண்டுபிடித்தனர். 7 பேரையும் கைது செய்து விசாரித்தனர்.

அவர்கள் மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த ரூப் சிங் பாகல் என்கிற ரூப் சிங் (22), சங்கர்சிங் பாகல்(26), பவன்குமார் விஷ்கர்மா (22), ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி மாவட்டத்தை சேர்ந்த பூபேந்தர் மன்ஜி(24), அதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரியான விவேக் மண்டல் (31), உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தை சேர்ந்த கண்டெய்னர் லாரி டிரைவர் டீக்ராம் (55), கிளீனர் ராஜீவ்குமார் என்று தெரிய வந்தது.

கைதான 7 பேரிடம் இருந்து ரூ.12 கோடி மதிப்பிலான நகைகள், 7 துப்பாக்கிகள், ரூ.96 ஆயிரம் பணம், 13 செல்போன்கள் மற்றும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அமித் என்ற விவேக் சுக்லா என்பவன் தலைமறைவாகி உள்ளான். அவனை தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே தனிப்படையினர், கொள்ளை கும்பலை சேர்ந்த 7 பேரையும் நாளை ஓசூருக்கு அழைத்து வர முடிவு செய்து உள்ளனர். அதன்பிறகே இந்த கொள்ளையில் வேறு யாரும் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்பது தெரிய வரும்.
Tags:    

Similar News