செய்திகள்
சாத்தூரில் பயன்பாடற்ற நிலையில் உள்ள உழவர்சந்தை.

சாத்தூரில் உழவர் சந்தை மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?

Published On 2021-01-23 10:04 GMT   |   Update On 2021-01-23 10:04 GMT
சாத்தூரில் உழவர் சந்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சாத்தூர்:

விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்வதற்காக வேளாண் விற்பனை துறை மூலம் உழவர் சந்தை தொடங்கப்பட்டது.

கடந்த 2000-ம் ஆண்டு சாத்தூரில் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. சாத்தூரில் நான்கு வழி சாலை அருகே ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த சந்தை செயல்பட்டு வருகிறது.

சாத்தூர்,ஏழாயிரம்பண்ணை, உப்பத்தூர், நடுவப்பட்டி, சின்னக்காமன்பட்டி, மேட்டுப்பட்டி, நென்மேனி, நாகலாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை இங்கு வந்து விற்பனை செய்து வந்தனர்.

இதன்மூலம் இந்த பகுதியில் உள்ள மக்களும் பயன் பெற்று வந்தனர். நாளடைவில் இந்த உழவர்சந்தை பயன்பாடற்று போனது.

கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் சாத்தூர் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் தற்காலிகமாக உழவர்சந்தையில் செயல்பட்டன.

இவ்வாறு சில மாதங்களாக உழவர்சந்தையில் இந்த தற்காலிக கடைகள் செயல்பட்டு வந்தன.

இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் கடைகள் அனைத்தும் அறிஞர் அண்ணா மார்கெட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆதலால் தற்போது உழவர்சந்தை எவ்வித பயன்பாட்டின்றி பூட்டி கிடக்கிறது.

விவசாயிகளின் நலன் காக்க உருவாக்கப்பட்ட உழவர் சந்தையை முறையாக நடைமுறைப்படுத்தி, விவசாயிகளின் விளை பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக மீண்டும் உழவர்சந்தையை திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News