செய்திகள்
விமானம்

சென்னையில் 57 விமானங்கள் தாமதம்: 7 விமானங்கள் திருப்பி விடப்பட்டன

Published On 2021-01-23 01:59 GMT   |   Update On 2021-01-23 01:59 GMT
சென்னையில் நேற்று நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமான நிலையத்தில் 57 விமானங்கள் தாமதமாக சென்று வந்தன. 7 விமானங்கள் பெங்களூரு மற்றும் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.
ஆலந்தூர்:

சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்பட பல பகுதிகளில் நேற்று காலை 6.30 மணியில் இருந்து பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்களே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததால் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர்.

மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் ஓடுபாதையில் பனிமூட்டம் அதிகமாக இருந்தது. கடும் பனி மூட்டம் காரணமாக காலை 6 மணி முதல் 8 மணி வரை சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டன.

அதன்படி சென்னையில் இருந்து ஆமதாபாத், மதுரை, மும்பை, புனே, ஹூப்ளி, புவனேஸ்வர், டெல்லி, பெங்களூரு, திருச்சி, விசாகப்பட்டினம், கொல்கத்தா, கோவை, கவுகாத்தி, தூத்துக்குடி, சீரடி, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு செல்ல வேண்டிய 38 விமானங்கள் சுமார் 30 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

மேலும் பிறநகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த 19 விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 30 நிமிட தாமதத்துக்கு பிறகு அவை தரை இறங்கின.

அதேபோல் பெங்களூரு, மும்பை, டெல்லி, துபாய், அந்தமான் ஆகிய நகரங்களில் இருந்து சென்னை வந்த 5 விமானங்கள் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கும், டெல்லி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து வந்த 2 விமானங்கள் ஐதராபாத்துக்கும் திருப்பிவிடப்பட்டன.

காலை 9 மணிக்கு பிறகு பனி மூட்டம் குறைந்ததும் சென்னையில் விமான சேவை சீரானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News