செய்திகள்
அரியலூரில் இறுதிவாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட போது எடுத்த படம்.

அரியலூர்-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் 5,30,025 வாக்காளர்கள்

Published On 2021-01-21 09:36 GMT   |   Update On 2021-01-21 09:36 GMT
இறுதி வாக்காளர் பட்டியலின்படி, அரியலூர்-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 5,30, 025 வாக்காளர்கள் உள்ளனர்
அரியலூர்:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்டம் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ரத்னா நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் 2,54,807 ஆண் வாக்காளர்களும், 2,56,813 பெண் வாக்காளர்களும், 7 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 5,11, 627 வாக்காளர்கள் இருந்தனர்.

அதன் பின்னர் கடந்த டிசம்பர் 15-ந்தேதி வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்ததின்படி பொது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 10,348 வாக்காளர்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 9,837 வாக்காளர்கள் என மொத்தம் 20,185 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 896 வாக்காளர்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 891 வாக்காளர்களும் என மொத்தம் 1,787 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 1,31,335 ஆண் வாக்காளர்களும், 1,32,670 பெண் வாக்காளர்களும், 7 மூன்றாம் பாலின வாக்காளர்களும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 1,31,663 ஆண் வாக்காளர்களும், 1,34,347 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 5,30,025 வாக்காளர்கள் உள்ளனர் என்றார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரவிச்சந்திரன், கோட்டாட்சியர்கள் ஜோதி (அரியலூர்), பூங்கோதை (உடையார்பாளையம்), தேர்தல் தாசில்தார் குமரையா மற்றும் தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News