செய்திகள்
மணல்மேடு அருகே கண்ணில் கருப்பு துணி கட்டி, வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

மணல்மேடு அருகே விவசாயிகள், கண்ணில் கருப்பு துணி கட்டி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

Published On 2021-01-21 04:54 GMT   |   Update On 2021-01-21 04:54 GMT
மணல்மேடு அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள், கண்ணில் கருப்பு துணி கட்டி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல்மேடு:

மணல்மேடு அருகே மேலாநல்லூர் கிராமத்தில் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் முற்றிலுமாக வயலில் சாய்ந்து சேதமடைந்துள்ளது.

மேலும் மேலாநல்லூர் வடிகால் வாய்க்காலை தூர்வாராததால் மழை நீர் வடிய வழியின்றி அனைத்து பயிர்களும் அழுகி துர்நாற்றம் வீசுகிறது.

இதுதொடர்பாக மேலாநல்லூர் கிராமத்தில் வேளாண்துறை அதிகாரிகள் யாரும் சென்று பார்வையிடவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்தநிலையில் ஆத்திரமடைந்த விவசாயிகள் கண்ணில் கரும்பு துணி கட்டி வயலில் இறங்கி அழுகிய நெற்பயிர்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விவசாயிகள், வேளாண்துறை அதிகாரிகள் பயிர் சேதத்தை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு தொகை 100 சதவீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

கொள்ளிடம் அருகே பழையபாளையம், கொடக்கார மூலை பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முற்றிலும் சேதம் அடைந்தன. இதனால் தமிழக அரசு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளிடம் பகுதிக்கு 75 சதவீத பாதிப்படைந்ததாக அறிவித்து ஒரு ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்கப்படுகிறது.

ஆனால் பழையபாளையம் ஊராட்சி பகுதியில் ஏக்கருக்கு ரூ.1,000 மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. பாதி பேருக்கு நிவாரண தொகை வழங்கப்படவில்லை. அரசு அறிவித்த நிவாரண தொகையை வழங்காமல் ஏக்கருக்கு ரூ.1000 மட்டும் வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து பழையபாளையம் கிராமத்தில் விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News