செய்திகள்
வெள்ளியணை பெரிய குளம் வாய்க்கால் புதர்மண்டி கிடப்பதை படத்தில் காணலாம்.

குடகனாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு- தூர்வாரப்படாததால் நீர் வருவதில் சிக்கல்

Published On 2021-01-18 06:01 GMT   |   Update On 2021-01-18 06:01 GMT
வெள்ளியணை பெரியகுளம் வாய்க்காலுக்கு குடனாறு அணையில் இருந்து தண்ணீா் விடப்பட்டது. தூர்வாரப்படாததால் நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வெள்ளியணை:

கரூா் மாவட்டத்தில் உள்ள முக்கியமான குளங்களில் வெள்ளியணை பொிய குளம் வாய்க்கால் ஒன்றாகும். சுமாா் 400 ஏக்கர் பரப்பளவை நீா் தேங்கும் பகுதியாக கொண்ட இந்த குளத்தில் நீா் நிரம்பினால் சுமாா் 50 கிலோ மீட்டர் தூரம் வரை நீா் கசிவு ஏற்பட்டு அப்பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் ஆகியவற்றின் நீா் மட்டம் உயரும்.இதனால் அப்பகுதிகளில் தோட்ட விவசாயத்திற்கும், கிராம மக்களின் குடிநீா் தேவைக்கும் சுமாா் 5 ஆண்டுகள் வரை தடையின்றி நீா் கிடைக்கும். இப்பகுதியில் பெய்யும் கன மழையின் போது குளத்தை சுற்றி சில கிலோமீட்டர் தொலைவு மேடான பகுதியிருந்து ஓடி வரும் நீரால் இந்த குளம் நிரம்பி வந்தது.

இவ்வாறு கன மழை பெய்து குளம் நிரம்புவது பல ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்ந்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலையடைந்தனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கன மழை பெய்து வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் குடகனாறு நீா், அமராவதி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்வதை தடுத்து, இந்த குளத்திற்கு கொண்டு வந்து நிரப்ப கோரிக்கை வைத்தனர். அதன் பயனாக 1976-ம் ஆண்டு தமிழக அரசு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் வட்டம் அழகாபுாி கிராமத்தில் குடகனாற்றின் குறுக்கே அணை கட்டி அங்கிருந்து வெள்ளியணை பொிய குளம் வாய்க்கால் வரை 54 கிலோ மீட்டர் நீள கால்வாய் வெட்டி நீா் கொண்டு வந்து குளத்தை நிரப்ப வழிவகை செய்து கொடுத்தது.

இதனால் அணை நிரம்பும் காலங்களில் வெள்ளியணை பெரிய குளம் வாய்க்காலில் நீர் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து வந்த கன மழை காரணமாக குடகனாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்து, அதன் முழு கொள்ளளவான 27 அடியை எட்டியது. இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் வெள்ளியணை பெரிய குளம் வாய்க்காலிற்கு தண்ணீரை திறந்து விட்டார்.

இந்த நிலையில் நீர் வரத்து வாய்க்கால் முறையாக தூர்வாரப்படததால் ஆங்காங்கே செடிகள், புதர்கள் மண்டி இருப்பதால் திறந்துவிடப்பட்ட நீர் மிகவும் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் நீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நீர் தொடர்ந்து வெள்ளியணை பெரிய குளம் வாய்க்காலுக்கு விரைவாக வந்து சேர வேண்டுமானால் வாய்க்காலில் உள்ள செடி, கொடிகள், புதர்களை அப்புறப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனை அடுத்து வாய்க்கால் கடந்து வரும் வழியில் உள்ள வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு, மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி, வெள்ளியணை ஆகிய ஊராட்சி மன்றங்களை சேர்ந்த தலைவர்கள் தங்கள் பகுதியில் வாய்க்காலில் உள்ள செடி, கொடி, புதர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது 60 கன அடியாக திறந்து விடப்பட்டுள்ள நீர், வாய்க்கால் சுத்தப்படுத்தப்பட்டு, திறந்து விடப்படும் நீரின் அளவு 100 கனஅடியாக உயர்த்தப்பட்டால் வெள்ளியணை பெரியகுளம் வாய்க்காலுக்கு விரைவாக நீர் வந்து சேரும் என்ற எதிர்பார்ப்பில் வெள்ளியணை மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் உள்ளனர்.
Tags:    

Similar News