செய்திகள்
ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள செடிகளில் மலர்கள் உதிர்ந்து இருக்கும் காட்சி.

தொடர் மழை காரணமாக ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் உதிர்ந்தன

Published On 2021-01-09 11:11 GMT   |   Update On 2021-01-09 11:11 GMT
தொடர் மழை காரணமாக ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்கள் உதிர்ந்து வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்றும் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. ஊட்டி நகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் பனிமூட்டம் நிலவியது.

தொடர் மழை காரணமாக ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து வருகின்றனர். ஊட்டி ரோஜா பூங்காவில் 4,202 ரகங்களை சேர்ந்த 32 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தொடர் மழையால் செடிகளில் ரோஜா மலர்களின் இதழ்கள் உதிர்ந்து கீழே விழுந்த வண்ணம் உள்ளது. மேலும் தண்ணீரில் நனைந்து அழுக தொடங்கி உள்ளன.

இதனால் செடிகளில் ரோஜா மலர்கள் இல்லாமல் வெறுமனே காட்சி அளிக்கிறது. அழுகிய மலர்களை பணியாளர்கள் வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். ரோஜா பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலர்கள் இல்லாததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

கோடை சீசனையொட்டி பூங்காவின் ஒரு பகுதியில் ரோஜா செடிகள் கவாத்து செய்யப்பட்டு உள்ளது. சில பகுதிகளில் மட்டும் மலர்கள் இருந்த நிலையில், தொடர் மழையால் தற்போது அங்கும் மலர்கள் குறைவாக இருக்கிறது. பூங்காவை சீசனுக்கு தயார்படுத்துவதற்காக கவாத்து செய்யப்பட்ட செடிகளுக்கு இயற்கை உரமிடுவது, களை எடுப்பது போன்ற பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
Tags:    

Similar News