செய்திகள்
சேரம்பாடியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-01-08 14:58 IST   |   Update On 2021-01-08 14:58:00 IST
பந்தலூர் அருகே காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பந்தலூர்:

பந்தலூர் அருகே கடந்த மாதம் ஒரே வாரத்தில் தந்தை-மகன் உள்பட 3 பேரை காட்டு யானை தாக்கி கொன்றது. அத்துடன் இங்குள்ள சேரம்பாடி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சேரம்பாடி சப்பந்தோடு, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, கண்ணம்பள்ளி, செம்பக்கொல்லி ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் தொந்தரவு அதிகரித்து உள்ளது. அத்துடன் அவைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களையும் நாசப்படுத்தி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

எனவே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை நிரந்தரமாக தடுக்க வேண்டும், அகழி வெட்ட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள். ஆனால் அந்த கோரிக்கைகளை வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. எனவே காட்டுயானைகளின் அட்டகாசத்தை தடுக்கக்கோரி சேரம்பாடி சுங்கம் வனத்துறை அலுவலகம் முன்பு சேரங்கோடு ஊராட்சி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற பொதுமக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 24-ந் தேதி சேரம்பாடியில் உண்ணாவிரத போராட்டமும், ரேஷன் கார்டுகளை மாவட்ட நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டமும் நடத்தப்படும் என்றனர்.

Similar News