செய்திகள்
கைது

செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் கைது

Published On 2021-01-08 01:58 GMT   |   Update On 2021-01-08 01:58 GMT
செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்கில் சசிகலாவின் உறவினர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநில போலீசார் சென்னை வந்து அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.
பூந்தமல்லி:

சென்னை அண்ணாநகரில் வசித்து வருபவர் பாஸ்கர். இவர், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் அண்ணன் ஜெயராமின் மகன் விவேக்கின் மாமனார் ஆவார்.

இவர் மீது செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே பாஸ்கர் மற்றும் அவரது தம்பி சிட்டி ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

2018-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிட்டி ராஜா, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். ஆனால் அதன்பிறகும் பாஸ்கர் தொடர்ந்து செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதை மறைப்பதற்காக பர்னிச்சர் கடை ஒன்றை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

இதற்கிடையில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் ரூ.48 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்திலும் பாஸ்கரை தேடிவந்தனர். மேலும் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு உள்பட 28 வழக்குகள் பாஸ்கர் மீது நிலுவையில் உள்ளது.

ஆனால் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர் என்ற அடையாளத்தை வைத்து வழக்குகளில் இருந்து தொடர்ந்து தப்பித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 20 பேர் அடங்கிய ஆந்திர மாநில தனிப்படை போலீசார் நேற்று சென்னை அண்ணாநகர் வந்து செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் பாஸ்கரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை ஆந்திராவுக்கு அழைத்து சென்றனர்.

2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது. அப்போது பாஸ்கர் வீட்டிலும் 3 நாட்கள் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News