செய்திகள்
24 அடி நீர் நிரம்பியுள்ள பிளவக்கல் அணை

வத்திராயிருப்பு பகுதியில் மழை : பிளவக்கல் அணையின் நீர்மட்டம் உயர்வு

Published On 2021-01-05 23:29 IST   |   Update On 2021-01-05 23:29:00 IST
வத்திராயிருப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையினால் பிளவக்கல் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வத்திராயிருப்பு:

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் சாரல் மழையால் வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 22 அடியில் இருந்து 2 அடி உயர்ந்து தற்போது 24 அடியாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வத்திராயிருப்பை சுற்றி உள்ள 40 கண்மாய்களில் 12 கண்மாய் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

20 கண்மாய் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நீர் நிரம்பி உள்ளது. மீதமுள்ள 8 கண்மாய்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாகவும் அணைக்கு நீர் வரத்து வருவதை பொறுத்து தண்ணீர் பற்றாக்குறையில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பெய்து வரும் மழையால் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.

பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் மூலம் வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் 8 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்தாண்டு பெய்த மழையை விட இந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Similar News