செய்திகள்
திருபுவனையில் குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கிக்கிடப்பதை படத்தில் காணலாம்.

திருபுவனை பகுதியில் தொடர் மழையால் பல்லாங்குழியான சாலைகள்- வாகன ஓட்டிகள் அவதி

Published On 2021-01-04 20:00 IST   |   Update On 2021-01-04 20:00:00 IST
தொடர் மழையால் திருபுவனை பகுதி சாலைகள் பல்லாங்குழியாக மாறியுள்ளன.
திருபுவனை:

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு ஊர்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாக திருபுவனை உள்ளது. கடந்த மாதம் அடுத்தடுத்து உருவான நிவர், புரெவி புயலால் கொட்டித்தீர்த்த மழையால் புதுவை நகரம், கிராமப்புற சாலைகள் பெரும் சேதம் அடைந்துள்ளன.

போக்குவரத்துக்கு முக்கிய சாலையாக விளங்கும் திருபுவனை பகுதி சாலைகளும் மிகவும் சேதம் அடைந்து பல்லாங்குழியாக காட்சி அளிக்கிறது.

இந்த சாலைகளில் தொடர்ந்து கனரக வாகனங்கள், பஸ்கள் செல்வதால் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலையில் சிதறிக் கிடப்பதாலும் காற்றில் புழுதி பறப்பதாலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறார்கள்.

அவசர நேரத்தில் கூட வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு படுமோசமாக சாலைகள் காட்சி அளிக்கின்றன. இந்த சாலை வழியாக அரசு அதிகாரிகள், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் தினமும் சென்று வருகிறார்கள். ஆனால் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு பெய்த மழையால் சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

திருபுவனை சின்ன பேட்டை சாலையில் பெரிய, பெரிய அளவில் பள்ளங்கள் உருவாகி உள்ளதால் சாலையில் மரக்கட்டைகளை போட்டு வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு 9 மாதங்களுக்கு பின்னர் புதுவையில் இன்று (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதால் இந்த சாலை வழியாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று வருவார்கள். எனவே மாணவர்களின் நலனை கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலைகளை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News