செய்திகள்
விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரத்தில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தபோது

மேலும் 6 இடங்களில் அம்மா கிளினிக் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்

Published On 2020-12-30 00:39 GMT   |   Update On 2020-12-30 00:39 GMT
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 2-ம் கட்டமாக 6 கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகளை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.
விருதுநகர்:

விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரம், ராமலிங்கபுரம் அருப்புக்கோட்டை அருகே குருந்தமடம் ஆகிய கிராமங்களில் அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்து அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொது சுகாதாரத்திற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வறுமையில் இருப்பவர்கள் எந்த அளவிற்கு வாழ்வாதாரம் இழந்து சிரமப்படுவார்கள் என்பதை எண்ணி அதற்கான திட்டங்களை வழங்கி வருகிறார்.

கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வருகிறார். இம்மாவட்டத்தில் முதல் கட்டமாக 20 இடங்களில் அம்மா கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போது சங்கரலிங்கபுரம், ராமலிங்கபுரம், குறும்படம், செட்டிகுறிச்சி, அருப்புக்கோட்டையில் 3-வது வார்டு, திருச்சுழியில் வெள்ளையாபுரம் என 6 இடங்களில் மினி கிளினிக்குகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள இடங்களிலும் படிப்படியாக இந்த வசதி செய்து தரப்படும். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசு தொகை ரூ.2500 வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழக மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் வாழ வேண்டுமென்பதே ஜெயலலிதாவின் எண்ணமாகும். அதே வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து சிகிச்சை முறைகளை பார்வையிட்ட அமைச்சர் 7 கர்ப்பிணிகளுக்கு அம்மா தாய் சேய் நல பெட்டகங்களையும், 12 கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவியையும் வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் விஜயகுமரன், மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சருக்கு கிராம மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.
Tags:    

Similar News