செய்திகள்
கரடி

குன்னூர் அருகே ரேஷன் கடையை உடைத்து கரடி அட்டகாசம்

Published On 2020-12-29 18:35 IST   |   Update On 2020-12-29 18:35:00 IST
குன்னூர் அருகே ரேஷன் கடையை உடைத்து கரடி அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
குன்னூர்:

குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளிலும் விவசாய நிலங்களிலும் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகளவில் உள்ளது.

குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் குடியிருப்பு பகுதியில் தேயிலை தோட்டங்களும் அதன் அருகே வனப்பகுதியும் உள்ளது. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து ஒரு கரடி வெளியே வந்தது. பின்னர் அது தேயிலை தோட்டத்தில் சுற்றியது.

பிறகு அது நேற்று அதிகாலை 4 மணிக்கு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. அங்கு சாப்பிட எந்த பொருட்களும் கிடைக்காததால் அங்குள்ள ஒரு கோவிலுக்குள் சென்றது. அங்கும் சாப்பிட எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் அந்த கரடி வெளியேறியது. பின் அதன் அருகே உள்ள ரேஷன் கடைக்கு சென்ற கரடி, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றது.

அங்கு இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தூக்கி வீசி நாசம் செய்துவிட்டு அங்கிருந்து வெளியே சென்றது. இதையடுத்து அந்த கடையை சீரமைக்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டனர். ஏற்கனவே காட்டு யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது கரடியும் நடமாடுவதால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

Similar News