செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகம்

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு அடுத்த மாதம் செமஸ்டர் தேர்வு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

Published On 2020-12-25 12:13 IST   |   Update On 2020-12-25 12:13:00 IST
என்ஜினீயரிங் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் அடுத்த மாதம் இணைய வழியிலேயே நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை:

கொரோனா தொற்று பரவல் காரணமாக கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இறுதி செமஸ்டர் தேர்வை தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர். இறுதி செமஸ்டர் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப் பட்டு முடிவுகள் சமீபத்தில் வெளியானது.

இந்தநிலையில் கடந்த 7-ந்தேதி முதல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்காக என்ஜினீயரிங் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் அடுத்த மாதம் இணைய வழியிலேயே நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசன் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

நடப்பு செமஸ்டருக்கான செய்முறை தேர்வுகள் இந்த மாதத்தில் நடத்தப்படும். இள நிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான எழுத்து தேர்வுகள் அடுத்த மாதம் (ஜனவரி) ஆன்லைனில் நடத்தப்படும். ஆன்லைனில் நடைபெறும் தேர்வுகளை முறையான கண்காணிப்பாளர்கள் கொண்டு கண்காணிப்பதை கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தேர்வில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் தான் கலந்து கொள்கிறார்களா என்பதை அவர்களின் அரசு புகைப்பட அடையாள அட்டை அல்லது கல்லூரி அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதுதொடர்பாக மண்டல அலுவலகத்துடன் கல்லூரிகள் தொடர்பில் இருக்க வேண்டும்.

இணைய வழியில் நடைபெறும் தேர்வுகளில் 20 மாணவர்களுக்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் நியமிக்க வேண்டும். தேர்வு குறித்த கால அட்டவணை விரைவில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News