செய்திகள்
ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

ரஜினி கேட்டுக்கொண்டால் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவேன் - கமல்ஹாசன்

Published On 2020-12-21 12:37 IST   |   Update On 2020-12-21 12:37:00 IST
ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டால் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவேன் என செய்தியாளர்கள் கேள்விக்கு கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார்.

காஞ்சீபுரம்:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற தலைப்பில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட பிரசாரத்தை கடந்த 13-ந்தேதி மதுரையில் தொடங்கினார். 14, 15, 16 ஆகிய தேதிகளில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் முதல்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தார்.

இந்தநிலையில் கமல்ஹாசன் இன்று தனது 2-வது கட்ட பிரசாரத்தை காஞ்சீபுரத்தில் தொடங்கினார். இதற்காக அவர் நேற்று மாலை 4 மணிக்கு ஆலந்தூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார். போரூர், பூந்தமல்லி வழியாக காஞ்சீபுரம் சென்றார்.

நேற்று மாலை காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் கட்டமைப்பு மாநில செயலாளர் எஸ்.கே. பி.பி. கோபிநாத், நிர்வாகிகள் பிரபாகரன், மயில்வாகனன், பிரதீப்குமார், ஏசு, சண்முகம், தொல்காப்பியன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்தநிலையில் கமல்ஹாசன் இன்று காலை காஞ்சீபுரத்தில் 2-வது கட்ட பிரசாரத்தை தொடங்கினார். காலையில் அண்ணா நினைவு இல்லத்துக்கு சென்ற அவர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணா பிறந்த காஞ்சீபுரத்தில் 7 அம்ச திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். தமிழகத்தில் ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும். அரசு திட்டங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மக்களை சென்றடைய வேண்டும்.

தொழிற்புரட்சி ஏற்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இல்லத்தரசிகளுக்கு மாதம் தோறும் அரசு ஊதியம் அளிக்கும் திட்டத்தையும் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். பசுமை புரட்சியையும் செய்வேன்.

ஒருவனை வறுமை கோட்டுக்கு மேலே தூக்கி வைத்துவிட்டால் அரசு வென்றுவிட்டது என்று பொருள் அல்ல. வாழ்க்கையில் பல சறுக்கல்கள் வரலாம். அப்படி வறுமை கோட்டுக்கு மேலே இருப்பவர்கள் சறுக்கும் போது வறுமை கோட்டுக்கு கீழே தான் போவார்கள்.

செழுமை கோட்டுக்கு மேலே அவனை தூக்கி வைத்தால் சறுக்கல் நேர்ந்தாலும் வியாபாரத்தில் தோல்வி, எது நேர்ந்தாலும் அவன் வறுமை கோட்டுக்கு மேலேயே நிற்பான். இது பெரிய அல்ஜீப்ரா கணிதம் அல்ல. அப்படியே அண்ணார்ந்து பார்த்தால் உயரமான வி‌ஷயங்கள் தெரியும்.

கேள்வி:- ரஜினி கட்சி தொடங்கி சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன். ஆனால் முதல்வர் வேட்பாளராக நிற்கமாட்டேன் என்று கூறியிருக்கிறார். முதல்வர் வேட்பாளராக உங்களை நிற்கும்படி ரஜினி கேட்டால் நிற்பீர்களா?

பதில்:- ரஜினி முதல்வர் வேட்பாளர் என்று என்னை அறிவித்தால் ஏற்பேன்.

கேள்வி:- மு.க.ஸ்டாலின் பேசும் போது 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என்று கூறி இருக்கிறாரே?

பதில்:- அவர் கூட்டணி கட்சிகளுக்கு 34 இடங்கள் தான் என்று சூசகமாக தெரிவித்து இருக்கிறார்.

கேள்வி:- அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி சிறுபான்மையினர்களுடன் இணக்கமாக இருப்பதாக காட்டி உள்ளார்களே?

பதில்:- சிறுபான்மையினர் எனது தம்பிகள், அவர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும்.

பதில்:- நான் நாத்திகர் இல்லை. பகுத்தறிவாளன். ஆனால் என்னை நாத்திகர் என்று முத்திரை குத்துகிறார்கள்.

கேள்வி:- ரே‌ஷன் கார்டுகளுக்கு ரூ.2,500 ரொக்கப் பணம் அறிவிக்கப்பட்டுள்ளதே?

பதில்:- தேர்தலை மனதில் வைத்து அறிவித்து இருக்கிறார்கள். அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் ஓட்டுக்கு ரூ.500 முதல் ரூ.2,500 வரை கொடுக்கப்போவதாக தகவல் பரவுகிறது. ஆனால் நான் பணத்தை நம்பவில்லை. மக்களை நம்பியே தேர்தலில் நிற்கிறேன்.

கேள்வி:- எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பீர்கள்?

பதில்:- கூட்டணி பற்றி இப்போது எதும் சொல்ல முடியாது. கூட்டணி தொடர்பான நிலைபாட்டை ஜனவரி மாதம் அறிவிப்பேன். தமிழகத்தில் ஊழல் இல்லா ஆட்சி அமைந்தால் தான் தமிழகம் தலை நிமிரும். அரசு திட்டங்கள் 30 சதவீதம் தான் மக்களுக்கு போய் சேருகிறது. மீதி 70 சதவீதம் அரசியல்வாதிகளுக்கே செல்கிறது.

கேள்வி:- தி.மு.க. ஆட்சி அமைவதை தடுக்க புதுப்புது கட்சிகள் உதயமாகின்றன என்று மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறாரே? அவர் உங்களை சொல்லி இருக்கிறாரா?

பதில்:- அவர் எங்களை சொல்லவில்லை. வேறு யாரையாவது சொல்லி இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News