செய்திகள்
சிங்கம்புணரி தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக காத்திருந்த நோயாளிகள்

சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

Published On 2020-12-19 14:33 IST   |   Update On 2020-12-19 14:33:00 IST
சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் சிகிச்சை பெறுவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
சிங்கம்புணரி:

சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் சிங்கம்புணரியும் ஒன்று. இது தனித்தாலுகா அந்தஸ்து பெற்று சுமார் 5 ஆண்டுகள் ஆகிறது. சிங்கம்புணரியை சுற்றி 100 கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அன்றாட தேவைக்கு சிஙகம்புணரிக்கு தான் வந்து செல்கிறார்கள்.

சுற்றுப்புற கிராம மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிங்கம்புணரியில் கடந்த 1970-ல் அரசு பொது மருத்துவமனை கட்டப்பட்டது. அதன்பின்னர் தாலுகா அந்தஸ்து பெற்றவுடன் மருத்துவமனையும் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 60 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற படுக்கை வசதிகள் உள்ளன.

தினமும் இந்த ஆஸ்பத்திரிக்கு 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டதற்கு 8 டாக்டர்கள் பணி அமர்த்தப்பட்டனர். மற்ற 6 டாக்டர்கள் வேறு ஆஸ்பத்திரிக்கு பணிமாற்றம் சென்று விட்டனர். இதனால் தற்போது 2 டாக்டர்கள் தான் பணியாற்றி வருகிறார்கள்.

இதனால் அனைத்து நோயாளிகளுக்கும் விரைந்து சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை இருக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் சிகிச்சை பெறுவதற்காக சிவகங்கை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று விடுகின்றனர். புறநோயாளிகளை கவனிப்பதற்கே டாக்டர் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளதால் உள்நோயாளிக்கு உடனுக்கு உடன் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. வெளிநோயாளிகள் ஆஸ்பத்திரியிலேயே பல மணி நேரம் காத்து கிடப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகி அவதிப்படுகின்றனர்.

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த அப்பாஸ் கூறும் போது, கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு புறநோயாளிகள் வருகை குறைவாக காணப்பட்டது. தற்போது கொரோனா தொற்று குறைந்து விட்டன. அதோடு மழைக்காலம் என்பதால் சாதாரண சளி, காய்ச்சல் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சை பெற ஏராளமான நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். இங்கு 2 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றுவதால் அவர்கள் பல மணி நேரம் காத்து கிடக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதல் டாக்டர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அண்ணா நகரை சேர்ந்த இளையராஜா என்பவர் கூறும் போது, இந்த அரசு பொது மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்பட்டது. கடந்த காலங்களில் பிரசவங்கள் மருத்துவமனை செவிலியர்களே பார்க்கின்ற அவல நிலை உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் பெண் மருத்துவர் ஒருவர் கூட இங்கு பணியில் இல்லை. இருந்தவர்களை வேறு ஊர்களுக்கு தற்காலிக பணிக்காக அனுப்பி உள்ளனர். இதனால் கர்ப்பிணிகள் ஆண் டாக்டரிடம் சிகிச்சை பெற தயக்கம் காட்டுகின்றனர். அதோடு பலர் தனியார் மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். எனவே தாலுகா மருத்துவமனையாக விளங்கும் இங்கு கூடுதல் டாக்டர்களை அரசு நியமிக்க வேண்டும் என்றார்.

Similar News