செய்திகள்
ஜூஜூவாடி போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்த பணம்

போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Published On 2020-12-19 02:44 GMT   |   Update On 2020-12-19 02:44 GMT
ஓசூர் ஜூஜூவாடி போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஓசூர்:

தமிழக-கர்நாடக எல்லையான கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஜூஜூவாடி என்ற இடத்தில் போக்குவரத்து சோதனைச்சாவடி உள்ளது. கர்நாடக மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் இந்த சோதனைச்சாவடியை கடந்தே வரவேண்டும். இந்தநிலையில் வெளிமாநிலங்களில் இருந்து பாரம் ஏற்றி வரும் லாரி உள்ளிட்ட வாகனங்களின் டிரைவர்களிடம் பணம் லஞ்சம் வாங்குவதாக கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிரு‌‌ஷ்ணராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட குழுவினர் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஓசூர் ஜூஜூவாடி போக்குவரத்து சோதனைச்சாவடிக்கு வந்து திடீரென சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 40 மேஜைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தி, உதவியாளர்கள் முருகன், ராமலிங்கம் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். ஜூஜூவாடி போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல் கடந்த 12-ந் தேதி, ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள அவுட் கோயிங் செக்போஸ்ட் மற்றும் ஓசூரில் இருந்து நல்லூர் செல்லும் வழியில் உள்ள சோதனைச்சாவடியிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 2 இடங்களிலும் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 20 பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News