செய்திகள்
கோப்புப்படம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.34 லட்சம் தங்கம் பறிமுதல்

Published On 2020-12-18 04:00 IST   |   Update On 2020-12-18 04:00:00 IST
சென்னை விமான நிலையத்தில் ரூ.34 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது சந்தேகத்தின்பேரில் சென்னையை சேர்ந்த முகமது ஜலாலுல்லா (வயது 46), திருச்சியை சேர்ந்த அப்துல் சலீம் (61), ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த காதர் மீரான் (45) ஆகிய 3 பேரை நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர். அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது, அட்டை பெட்டியில் ரகசிய அறைகள் அமைத்து பிளாஸ்டிக் சீட்டில் தங்க தகடுகள், கைப்பையில் தங்க சங்கிலிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

மேலும் இவர்களது உடைமைகளில் சிகரெட்டுகள், டிரோன் ஆகியவற்றை கடத்தி வந்ததும் தெரிந்தது. 3 பேரிடம் இருந்தும் ரூ.34 லட்சத்து 11 ஆயிரம் மதிப்புள்ள 667 கிராம் தங்கம், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகள், டிரோன் ஆகியவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

Similar News