செய்திகள்
புதுவை கவர்னர் கிரண்பேடி

31ந் தேதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கை- கவர்னர் கிரண்பேடி உத்தரவு

Published On 2020-12-17 09:13 GMT   |   Update On 2020-12-17 09:13 GMT
மருத்துவ மாணவர் சேர்க்கையை வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனித்தனியாக வெளியிடப்பட்டது.

தற்போது தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசுக்கு 23 சதவீத இடங்களையே ஒதுக்கி வருகின்றன. அரசுக்கு 50 சதவீத இடங்கள் வழங்கக்கோரி பெற்றோர், மாணவர்கள் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மேல்முறையீடு செய்ய புதுவை அரசு முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில் புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அரசுக்கு 50 சதவீத இடங்களை பெறுவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து கவர்னர் மாளிகையில் நேற்று கவர்னர் கிரண்பேடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தலைமை செயலாளர் அஸ்வனி குமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார், சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது புதுவையில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதற்கான கலந்தாய்வை வருகிற 31-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி சென்டாக் செயல்பட வேண்டும். 2020-21 சென்டாக் கையேட்டில் குறிப்பிட்டுள்ள அடிப்படையில் தான் அரசு, நிர்வாக ஒதுக்கீடு இடம்பெறவேண்டும். சென்டாக் எவ்வித தாமதமும் இன்றி மருத்துவ மாணவர் சேர்க்கையை வருகிற 31-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

புதுவை அரசுக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெறுவது, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கோப்பு மத்திய அரசிடம் உள்ளது. அதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. அதனை பெற மாநில அரசு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். கடந்தாண்டு நிர்ணயித்த அதே கல்வி கட்டணம் தொடரும். வரும் காலங்களில் அரசு அனுமதி தந்த பிறகே சென்டாக் கையேட்டை பிரசுரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News