செய்திகள்
பெற்றோர்கள் கருத்து

பள்ளிகளை திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம்- பெற்றோர்கள் கருத்து

Published On 2020-12-17 08:34 GMT   |   Update On 2020-12-17 08:34 GMT
புதுச்சேரியில் வரும் 4-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்து இருப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:

புதுச்சேரியில் வரும் 4-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்து இருப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

புதுவை சாரதாம்பாள் நகர் மலர்கொடி (தையல் பயிற்சி ஆசிரியை):-

பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இது ஆபத்தானது. இறுதியாண்டு மாணவர்களை மட்டும் தான் கல்லூரிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 6-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களை வரவேற்கலாம். செலவழிக்க வழிஇல்லாமல் தான் அரசு பள்ளியில் குழந்தைகளை படிக்க வைக்கிறோம். தமிழக பாட திட்டத்தை பின்பற்றும் நிலையில் அங்கு இன்னும் பள்ளிகளை திறக்காதபோது இங்கு மட்டும் திறப்பது முரண்பாடானது. பெற்றோரிடம் கருத்து கேட்காமல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது. தடுப்பூசி வந்த பிறகு பள்ளிக்கூடங்களை திறப்பது நல்லது.

பூராணாங்குப்பம் பத்மாவதி (குடும்பத் தலைவி):-

எனது குழந்தை தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த கல்வியாண்டு முடிவதற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து பாடங்களையும் நடத்த முடியுமா? என்பது சாத்தியமில்லாதது. 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக வகுப்பு நடத்தலாம். கொரோனா தடுப்பூசி அல்லது மருந்து கிடைக்கும் வரை பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்ட வேண்டாம்.

கோபாலன் கடை காஞ்சனா சக்திவேல்:

எனது பெண் குழந்தைகள் 6, 8-ம் வகுப்புகளில் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வகுப்புகளில் படித்து வருகிறார்கள். பள்ளிகள் திறப்பு அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை மட்டும் பள்ளிக்கு அழைத்து பாடங்களை நடத்தலாம். பள்ளிக்கூடங்களை திறப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த அறிவிப்பை அரசு பரிசீலிக்க வேண்டும்.

காந்திதிருநல்லூர் ராஜலட்சுமி (தனியார் பள்ளி ஆசிரியை):

நான் தனியார் பள்ளி ஆசிரியை. கொரோனா காரணமாக பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்வியாக இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ள காரணத்தால் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மாணவர்களுக்கும் இது மகிழ்ச்சியாக உள்ளது. அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.

செந்தில்குமார், முதலியார்பேட்டை (எலக்ட்ரீசியன்):

எனது 3 பெண் குழந்தைகள் தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். கொரோனாவால் 9 மாதங்கள் பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் அவர்களின் படிப்புத் திறன் குறைந்துள்ளது. ஆன்லைன் வகுப்பு, தேர்வு திருப்திகரமாக இல்லை. பள்ளிகள் திறப்பது நல்லது. குழந்தைகள் பள்ளிக்கு செல்லாதபோதும் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்கின்றனர். இதற்கு பள்ளிக்கு சென்றே படிக்கலாம். ஆனால் குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதற்கு பள்ளி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரேவதி லாஸ்பேட்டை (குடும்பத் தலைவி):

புதுவையில் தொற்று முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை. இந்த சூழ்நிலையில் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பினால் தொற்று பாதிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பள்ளிகளில் பொது கழிப்பறைகளை தான் மாணவர்கள் பயன்படுத்துவார்கள். பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம். 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News