செய்திகள்
சிறைக்காவலரை கொலை செய்த வழக்கில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சிறைக்காவலரை கொலை செய்த வழக்கில் 5 பேரையும் பாலூர் போலீசார் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அடுத்த பழையசீவரம் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை புழல் சிறை போலீஸ்காரர் இன்பரசு அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக நடைபெற்ற இக்கொலையில் தொடர்புடைய அதே பகுதியைச் சார்ந்த வரதராஜன் (வயது 25 ), ராஜதுரை (23), செந்தில்குமார் (24) விக்னேஷ் (22) ஜான்சன் (23) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் பரிந்துரையின் பேரில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, திருச்சி சிறையில் இருந்த 5 பேரையும் பாலூர் போலீசார் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.