செய்திகள்
சூரனூர் கிராமத்தில் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்.

காரியாபட்டி பகுதியில் தொடர்மழை : நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின - விவசாயிகள் கவலை

Published On 2020-12-10 07:53 IST   |   Update On 2020-12-10 07:53:00 IST
காரியாபட்டி பகுதியில் தொடர்மழை பெய்வதால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
காரியாபட்டி:

காரியாபட்டி தாலுகா, சூரனூர், கூவர்குளம், கோவிலாங்குளம் ஆகிய கிராமங்களில் தற்போது தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நல்ல விளைந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. ஆதலால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

சூரனூர் கிராமத்தில் சுமார் 40 ஏக்கரும், கூவர் குளம் கிராமத்தில் 10 ஏக்கரும், கோவிலாங்குளம் கிராமத்தில் 5 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களும் மழைநீரில் மூழ்கின.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

ஒரு ஏக்கர் நெல் விவசாயம் செய்ய குறைந்தது ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது.

இந்தநிலையில் காரியாபட்டி பகுதியில் பெய்த தொடர்மழையினால் நல்ல விளைந்த வந்த நெற்பயிர்கள் சாய ஆரம்பித்து விட்டன.

இந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் என்ன செய்வது என தெரியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தற்போது செலவு செய்த தொகையை கூட எடுக்க முடியாத நிலை நிலவுகிறது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரியாபட்டி தாசில்தார் தனக்குமாரிடம், குரனூர் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார், டி.செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் வேங்கை மார்பன் ஆகியோர் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட தாசில்தார் தனக்குமார், மாவட்ட கலெக்டருக்கு இந்த மனுவை அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Similar News