செய்திகள்
இறந்தவரின் உடலை மயானத்திற்கு அடக்கம் செய்ய தூக்கிச்சென்று போது எடுத்த படம்.

ஜெயங்கொண்டம் அருகே மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடலை தண்ணீரில் மயானத்திற்கு தூக்கி செல்லும் அவலம்

Published On 2020-12-09 15:43 IST   |   Update On 2020-12-09 15:43:00 IST
ஜெயங்கொண்டம் அருகே மழைக்காலங்களில் இறந்தவர்களின் உடலை கழுத்தளவு தண்ணீரில் மயானத்திற்கு தூக்கி செல்லும் தொடர்கதையாகி வருகிறது. இதனை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தில் நைனார் ஏரி உள்ளது. இந்த ஏரி சுமார் 64 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். ஏரிக்கு அருகில் உள்ள மயானத்திற்கு செல்ல தனி பாதை இல்லாத காரணத்தால் இந்த ஏரி கரையின் வழியாகத்தான் மயான கொட்டகைக்கு செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் இறப்பவர்களை மயானத்திற்கு கொண்டு செல்ல பெரும்பாடுபடுகின்றனர் இந்த கிராம மக்கள். ஏரியில் கழுத்தளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை சுமந்து செல்ல வேண்டியுள்ளது. தண்ணீர் அதிகம் இருந்தால் நீந்திக்கொண்டு தான் செல்லும் அவலமும் ஏற்படுகின்றது. வழக்கம் போல தற்போது புயல் காரணமாக மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் அனைத்து ஏரியிலும் தண்ணீர் அதிகளவில் உள்ளது. தற்போது நேற்று கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த சொக்கர் என்கிற ராமலிங்கம்(வயது 95) வயது முதிர்ச்சியின் காரணமாக உயிரிழந்தார்,

அவரது உடலை அடக்கம் செய்ய நைனார் ஏரியை கடந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது ஏரியில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் பொதுமக்கள் உயிரை பனையம் வைத்து இறந்தவர் உடலை அடக்கம் செய்ய மார்பளவு தண்ணீரில் தூக்கி சென்றனர். இதே நிலைதான் ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் ஏற்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் வருவார்கள் பார்வையிடுவார்கள் சென்றுவிடுவார்கள். ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

கடந்த ஆண்டு மழைக்காலத்தில் இறந்த ருக்கு என்ற மூதாட்டியின் உடலை அடக்க செய்ய கழுத்தளவு தண்ணீரில் மிதந்து கொண்டு சென்ற நிகழ்வை அறிந்த மாவட்ட கலெக்டர் இது குறித்து நேரில் வந்து ஆய்வு செய்தார். அப்போது மயானத்திற்கு செல்ல தனி பாதை அமைத்து தரப்படும் என கூறி சென்றவர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மயானத்திற்கு செல்ல தனிப்பாதை அமைத்து தர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News