செய்திகள்
தேயிலைத்தூள்

குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை கடும் வீழ்ச்சி

Published On 2020-12-07 10:57 GMT   |   Update On 2020-12-07 10:57 GMT
குன்னூர் ஏல மையத்தில் தேயிலைத்தூள் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது.
குன்னூர்:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகிறார்கள். இந்த பச்சை தேயிலைதான் தேயிலைத்தூள் தயாரிக்க மூலப்பொருளாக உள்ளது. குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விற்பனையாகும் தேயிலைத்தூளின் சராசரிவிலையை கருத்தில் கொண்டே சிறு விவசாயிகள் வினியோகிக்கும் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதனால் தேயிலைத்தூளின் விற்பனை விலையின் ஏற்ற-இறக்கம் பச்சை தேயிலை விலை நிர்ணயத்தில் நேரடியாக பங்கு பெறுகிறது. குன்னூரில் தேயிலை வர்த்தகர் அமைப்பின் மூலம் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலை ஏலம் நடத்தப்படுகிறது.

ஏலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு தேயிலைத்தூளை வாங்குகிறார்கள். அங்கு விற்பனை எண் 49-க்கான ஏலம் கடந்த 3, 4-ந் தேதிகளில் நடைபெற்றது. ஏலத்திற்கு மொத்தம் 21 லட்சத்து 17 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் வந்தது. இதில் 16 லட்சத்து 57 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 4 லட்சத்து 60 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 88 சதவிகித தேயிலைத்தூள் விற்பனையானது. விற்பனையான தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.21 விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

இதில் மொத்தம் 18 லட்சத்து 45 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இதன் ரொக்க மதிப்பு 20 கோடியே 16 லட்ச ரூபாய் ஆகும். சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு 308 ரூபாயாகவும், ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு 241 ரூபாயாகவும் விற்பனையானது. சராசரி விலையாக இலை ரகத்தின் சாதாரண விலை கிலோவுக்கு 81 ரூபாயில் இருந்து 90 ரூபாய் வரையில் ஏலம் சென்றது. உயர் வகை தேயிலைத்தூள் கிலோவுக்கு 132 ரூபாய் முதல் 166 ரூபாய் வரை ஏலம் போனது.

டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை கிலோவுக்கு 108 ரூபாய் முதல் 113 ரூபாய் வரையிலும், உயர் வகை தேயிலைத்தூள் கிலோவுக்கு 167 ரூபாயில் இருந்து 206 ரூபாய் வரையும் விற்பனையானது. விற்பனை எண் 50-க்கான ஏலம் வருகிற 10, 11 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த ஏலத்திற்கு மொத்தம் 20 லட்சத்து 98 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வர உள்ளது.
Tags:    

Similar News