செய்திகள்
கோப்பு படம்.

மானாமதுரை அருகே ஒரே நாளில் 3 இடங்களில் நகை பறிப்பு

Published On 2020-12-05 18:45 IST   |   Update On 2020-12-05 18:45:00 IST
மானாமதுரை அருகே ஒரே நாளில் 3 இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளன. மர்ம ஆசாமிகளை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மானாமதுரை:

மானாமதுரை அருகே அரியனேந்தல் மெயின் ரோடு பக்கம் எஸ்.காரைக்குடியைச் சேர்ந்த சந்திரனின் மனைவி ஜோதி (வயது 56) என்பவர் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் ஜோதி அணிந்திருந்த கவரிங் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடினார்கள். செல்லும் வழியில் வேதியரேந்தல் அருகே பூக்குளம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த இளையாநாயக்கன் கிராமத்தைச் சேர்ந்த ராசுவின் மனைவி முத்துலெட்சுமி அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர். அப்போது அவர் நகை பறிப்பதை தடுத்தார். உடனே அதில் ஒரு ஆசாமி அவரது கையில் கத்தியால் குத்தி விட்டு நகை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

இதே போன்று செய்யாலூர் விலக்கு ரோடு அருகே நடந்து சென்ற செல்வத்தின் மனைவி பாண்டியம்மாளிடமும் 3 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 3 பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்துள்ளதால் மானாமதுரை பகுதியில் நேற்று பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். நகை பறித்து சென்ற ஆசாமிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Similar News