செய்திகள்
ஆர்ப்பாட்டம்

கொட்டும் மழையில் விளைபொருட்களுடன் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-12-04 02:16 GMT   |   Update On 2020-12-04 02:16 GMT
டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுவையில் கொட்டும் மழையில் விளைபொருட்களுடன் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பாதகமாக இருப்பதாகவும் அதை வாபஸ்பெற வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. விவசாயிகளின் தொடர் போராட்டத்துக்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினரும், தொழிற்சங்கத்தினரும் ஆதரிப்பதுடன் போராட்டத்திலும் குதித்து வருகின்றனர்.

அதன்படி விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவையில் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் குதித்தனர். சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.சி.சி.டி.யு., எல்.எல்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஐ.யு.சி.யு.சி., அரசு ஊழியர் சம்மேளனம், ஆட்டோ ஓட்டுனர் சங்கம் போன்றவற்றை சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு விவசாய விளைபொருட்களான நெல், கரும்பு, வாழைத்தார், வேளாண் உபகரணங்களான ஏர் கலப்பை, மண்வெட்டி, மருந்து தெளிக்கும் கருவி போன்றவற்றுடன் கொட்டும் மழையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் அபிசேகம், சேதுசெல்வம், தினேஷ்பொன்னையா (ஏ.ஐ.டி.யு.சி.), சீனுவாசன், பிரபுராஜ் (சி.ஐ.டி.யு.), ஞானசேகரன் (ஐ.என்.டி.யு.சி.), புருஷோத்தமன் (ஏ.ஐ.சி.சி.டி.யு.), செந்தில் (எல்.எல்.எப்.), வேதா.வேணுகோபால் (எம்.எல்.எப்.), சிவக்குமார் (ஏ.ஐ.யு.டி.யு.சி), அரசு ஊழியர் சம்மேளன பிரேமதாசன், ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மணிவண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News