செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

சிவகங்கையில் இன்று 7,557 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்

Published On 2020-12-03 20:11 GMT   |   Update On 2020-12-03 20:11 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(வெள்ளிக்கிழமை) சிவகங்கைக்கு வருகை தருகிறார். 7,557 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், கொரோனா தடுப்பு பணிகளையும் ஆய்வு செய்கிறார்.
சிவகங்கை:

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக சிவகங்கைக்கு இன்று(வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிறார். இதற்காக அவர் இன்று காலை 10 மணி அளவில் மதுரை நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, கார் மூலம் புறப்பட்டு சிவகங்கை வருகிறார். பகல் 11 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

அதன்பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு புதிய திட்டப்பணிகள், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.29.32 கோடி மதிப்பில் 7 ஆயிரத்து 557 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் ரூ.27.46 கோடி மதிப்பில் 30 புதிய திட்ட பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.36.43 கோடி செலவில் முடிவடைந்த 27 புதிய திட்டப்பணிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். அங்கு அமைக்கப்பட்டு உள்ள பல்வேறு அரங்குகளின் கண்காட்சிகளை பார்வையிடுகிறார். அதன்பிறகு அவர் சிவகங்கை வேலுநாச்சியார் பயணிகள் விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு கார் மூலம் புறப்பட்டு மதுரை செல்கிறார்.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் மேற்பார்வையில் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து சிவகங்கை நகர் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேரில் பார்வையிட்டார்.

முன்னதாக சிவகங்கைக்கு வரும் முதல்-அமைச்சருக்கு கதர் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் ஆகியோர் தலைமையில் மாவட்ட எல்லையான மணலூரில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் பூவந்தி, திருமாஞ்சோலை, படமாத்தூர், முத்துப்பட்டி ஆகிய இடங்களிலும் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மேலும் சிவகங்கை நகர் எல்லையான ரிங் ரோடு பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையின் இருபுறத்திலும் அ.தி.மு.க. தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் திரண்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வழிநெடுகிலும் நின்று வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News