செய்திகள்
பீட்டர் லூயிஸ்

தனியார் நிறுவன மேலாளர் காரில் கடத்தல் - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2020-12-03 11:18 GMT   |   Update On 2020-12-03 11:18 GMT
ஓசூரில் தனியார் நிறுவன மேலாளரை காரில் கடத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா அருகே ஐ.டி.சி. என்ற பெயரில் சிகரெட் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இங்கு மனித வள மேம்பாட்டுத்துறை மேலாளராக பணிபுரிந்து வருபவர் பீட்டர் லூயிஸ் (வயது 45). இவருக்கு சுகன்யா பிரின்சி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் குடும்பத்துடன் அண்ணாமலை நகர் பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை வேலையை முடித்து விட்டு பீட்டர் லூயிஸ் காரில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அலுவலக வாசலில் மர்ம நபர்கள் 4 பேர், காரை வழிமறித்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரை, கத்திமுனையில் காரிலேயே கடத்தி சென்றனர். அவரது அலறல் சத்தம் கேட்டு, உதவி அதிகாரி கவுரி என்பவர் ‘காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’ என கூச்சலிட்டார்.

அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து வேகமாக காரில் சென்று விட்டனர். அவர்கள் யார்? எதற்காக தனியார் நிறுவன மேலாளரை கடத்தி சென்றனர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும், பீட்டர் லூயிசின் செல்போனும் ஆப் செய்யப்பட்ட நிலையில் உள்ளதால், அலுவலர்கள் மற்றும் குடும்பத்தினர் யாரும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இதுகுறித்து ஒசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் பீட்டர் லூயிசை காரில் கடத்தி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News