கடலூர் மாவட்டத்தில் பலத்த மழை- வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
ஸ்ரீமுஷ்ணம்:
வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் காரணமாக கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மிககன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தது.
கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுநகர், மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், வண்டி பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று காலைமுதல் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை களில் மழைநீர் வெள்ளம் போல் பெருக் கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் களம் போல் தேங்கிநின்றது.
மழையின் காரணமாக காலைநேரத்திலும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். பாத சாரிகள் மழையில் நனைந்த படியும், குடை பிடித்த படியும் சென்றதை காண முடிந்தது.
ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுபட்டார பகுதி களான தேத்தாம்பட்டு, ஸ்ரீநெடுஞ்சேரி, சாத்தமங்களம், குணமங்களம், சுத்துகுறிச்சி, பாளையங்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 4 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு இரவு முழுவதும் பெய்து கொண்டே இருந்தது.
இதனால் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள வியாசமணி தெரு, எம்.ஜி.ஆர்.நகர், மலைமேடு, பாணக்கார தெரு பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர்புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் சரியாக தூர்வாராபடாமல் இருப்பதால் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இதனால் இரவில் வீடுகளில் தூங்க முடியாமல் கடும் அவதியடைந்தோம்.
வடிகால் வாய்க்காள்களை தூர்வாரவேண்டும் என்று சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகளுடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் பெண்ணாடம் சுற்றுவட்டாரபகுதிகளில் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விடிய விடிய தொடர் மழை காரணமாக பெண்ணாடத்தில் கடை வீதி மற்றும் பஸ் நிலையம் திட்டக்குடி விருத் தாசலம் சாலையில் பொதுமக்கள் இன்றி வெறிச் சோடி காணப்பட்டது.
தினந்தோறும் காலை 7 மணிக்கு வணிகர்கள் தங்களது வணிக நிறுவன ங்களை திறப்பது வழக்கம் மழை காரணமாக 8 மணியாகியும் யாரும் கடைகளை திறக்க வில்லை. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தேங்கிய மழை நீரை அகற்ற வராததால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை பொதுமக்களே சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.