செய்திகள்
ஓம்சக்தி சேகர்

50 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்: நீதிமன்ற உத்தரவினை ஏற்று செயல்பட ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

Published On 2020-12-02 09:32 GMT   |   Update On 2020-12-02 09:32 GMT
தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு பெறும் விவகாரத்தில் அரசு கவுரவம் பார்க்காமல் நீதிமன்ற உத்தரவினை ஏற்று செயல்படவேண்டும் என்று ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையை ஆளும் தி.மு.க. ஆதரவுபெற்ற காங்கிரஸ் அரசு பல வருடங்களாக தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெறாமல் இடைத்தரகராக செயல்பட்டு மருத்துவ இடங்களை குறைத்து வாங்கி மாணவர்களுக்கு துரோகம் இழைத்து வந்தது.

இந்த ஏமாற்று வேலைக்கு புதுவை மாணவர்கள் நீதிமன்ற படியேறியதால் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை நீதிமன்றம் வழங்கியுள்ளது. புதுவை கவர்னரும் 50 சதவீத இடஒதுக்கீடு பெற தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் புதுவை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதில்லை என்றும் தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் 50 சதவீத இடங்களை அரசிடம் தரவேண்டும் என்று விதி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே மாணவர்கள் சார்ந்த இந்த விஷயத்தில் அரசு கவுரவம் பார்க்காமல் நீதிமன்ற உத்தரவினை ஏற்று செயல்பட வேண்டும். இல்லையெனில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க.வை தூக்கி எறிவார்கள். புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மாணவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை தனியார் மருத்துவ கல்லூரிகளில் பெற்றுத்தரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News