செய்திகள்
சாலைமறியல் செய்ய முயன்ற மலைவாழ் மக்களிடம் இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காட்சி

சாலை வசதி கேட்டு மலைவாழ் மக்கள் மறியல் செய்ய முயற்சி - போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

Published On 2020-11-29 14:51 IST   |   Update On 2020-11-29 14:51:00 IST
கல்வராயன் மலை அடிவாரத்தில் சாலை வசதி செய்து தரக்கோரி மறியல் செய்ய முயன்ற மலைவாழ் மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கச்சிராயப்பாளையம்:

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள கல்வராயன்மலையில் 171 கிராமங்களில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். மலை அடிவாரத்தில் மல்லிகை பாடி கிராமம் உள்ளது. இந்த மல்லிகை பாடி கிராமத்தில் இருந்து மதூர் கிராமத்திற்கு செல்ல போதுமான சாலை வசதிகள் இல்லாமல் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மல்லிகை பாடி கிராமத்திற்கு வரவேண்டும் என்றால் வெள்ளிமலை, கச்சிராயப்பாளையம் ஆகிய பகுதியை சுற்றிக் கொண்டு வெகுதூரம் கடந்து தான் வரவேண்டும்.

இந்த நிலையில் மல்லிகை பாடிக்கும் மதூர்க்கும் இடையே ஒரு அடர்ந்த வனப்பகுதிக்குள் ஒத்தையடி பாதையை அமைத்து அதன் வழியாக மலைவாழ் மக்கள் சென்று வந்தனர். ஆனால் இந்த பாதை வழியாக சென்று வர மிகவும் சிரமமாக இருந்ததால் அந்த பாதையை அகலப்படுத்தி சாலை அமைக்க அங்கு வசிக்கும் மக்கள் முடிவுசெய்தனர். ஆனால் இதை வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மலைவாழ் மக்கள் அனைவரும் மல்லிகை பாடி-மதூர் கிராமம் இடையே சாலை வசதி செய்து தரக்கோரி சாலை மறியல் செய்வதற்காக பரிகம் வனச்சரகர் அலுவலகம் முன்பு திரண்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் செய்ய முயற்சித்த மலைவாழ் மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது வனத்துறை அலுவலரிடம் சென்று கோரிக்கை மனு கொடுத்தால் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள், அதை விட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என தெரிவித்தனர். இதையடுத்து மழைவாழ் மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு வனத்துறை அலுவலர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர்கள் இந்த கோரிக்கை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். சாலை வசதி செய்து தரக்கோரி மழைவாழ் மக்கள் சாலை மறியல் செய்ய முயன்ற சம்பவத்தால் பரிகம் கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News