செய்திகள்
கோவில்பட்டியில் ஓடை ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றியதை படத்தில் காணலாம்.

கோவில்பட்டியில் 109 ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்

Published On 2020-11-29 08:53 IST   |   Update On 2020-11-29 08:53:00 IST
கோவில்பட்டியில் 109 ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில், கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தில் இருந்து லாயல் மில் மேம்பாலம் வரையிலும் சுமார் ரூ.7 கோடி செலவில் நான்குவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

இதற்கிடையே கோவில்பட்டி மெயின் ரோடு பகுதியில் ஓடை ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்றிய பின்னரே சாலை விரிவாக்க பணிகளை தொடங்க வேண்டும். ஓடை ஆக்கிரமிப்புகளால் மழைநீர் வடியாமல் சாலைகளில் தேங்குவதாக கூறி பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து கடந்த 17-8-2019 அன்று மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த 26-8-2019 அன்று முதற்கட்டமாக 13 கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கிடையே மற்ற கடைக்காரர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், அங்குள்ள 109 கடைகள் அகற்றப்படவில்லை.

இந்த நிலையில் கடைக்காரர்கள், சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த தீர்ப்பின் நகல், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து கோவில்பட்டி மெயின் ரோடு ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து நகரசபை நிர்வாகம் சார்பில், ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் பெரும்பாலான கடைகளில் இருந்த பொருட்களை கடைக்காரர்களே அகற்றினர்.

நேற்று காலை 6 மணி அளவில் ஓடை ஆக்கிரமிப்பில் உள்ள 109 கடைகளை இடித்து அகற்றும் பணி தொடங்கியது. 7 பொக்லைன் எந்திரங்கள், 4 நவீன கான்கிரீட் கட்டர் எந்திரங்கள் மூலம் கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதையொட்டி நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இடிக்கப்பட்ட கட்டிட கழிவுகளை பொக்லைன் எந்திரங்கள் மூலம் உடனுக்குடன் லாரிகள், டிராக்டர்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மாலை வரையிலும் 109 கடைகளையும் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.

அனைத்து கடைகளையும் அகற்றிய பின்னர் கோவில்பட்டி மெயின் ரோடு பகுதியில் ஓடையை தூர்வாரி, சாலை விரிவாக்கம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News